Published : 04 May 2015 07:56 AM
Last Updated : 04 May 2015 07:56 AM

சித்ரா பவுர்ணமி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு கூடுதல் ஆற்றல் உள்ளது. பூமியை சுற்றி வரும் சந்திரன், முழு பிரகாசத்துடன் காட்சி தரும். மேலும், சித்திரகுப்தன் அவதரித்த நாளும் இது. பார்வதி தேவி வரைந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தார் சிவபெருமான். அவரது மூச்சுக்காற்று பட்டு உருவானவர்தான் சித்திரகுப்தன். அந்த நாள்தான், சித்திரை மாதத் தில் வரும் பவுர்ணமியாகும். சித்ரா பவுர்ணமியில் மலைகோயில் களை கிரிவலம் வந்து சிவபெரு மான், பார்வதிதேவி மற்றும் சித்திர குப்தனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி சிறப்புப் பூஜை மற்றும் கிரிவலம் நேற்று நடந்தது. அதி காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதி முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் அனைவரும் ராஜகோபுரம் வழி யாகவும், முக்கிய பிரமுகர்கள் அம்மனி அம்மன் கோபுரம் வழி யாகவும் அனுமதிக்கப்பட்டனர்.

சித்ரா பவுர்ணமி நேற்று காலை 7.52 மணிக்கு தொடங்கியது. இருப்பினும், அண்ணாமலையை காலையிலேயே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். வெயில் சுட்டெரித்ததால் 11 மணிக்கு பிறகு, கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. பின்னர், மாலை 4 மணிக்கு பிறகு, பக்தர்கள் வருகை அதிகரித்தது. இரவு நேரத்தில் பக்தர்களின் கூட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதனால், 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் கடல் அலைபோல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சிவபெருமானின் பாடல்களை பாடிக்கொண்டு சிவனடியார்கள் கிரிவலம் சென்றனர். இன்று (திங்கள்கிழமை) காலை 8.48 மணிக்கு பவுர்ணமி முடிந்தாலும், பக்தர்களின் கிரிவலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

கிரிவலப் பாதையில் ஏராளமானவர்கள் அன்னதானம் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x