Last Updated : 14 May, 2015 08:01 AM

 

Published : 14 May 2015 08:01 AM
Last Updated : 14 May 2015 08:01 AM

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக சுரங்கப் பொறியியல் படிப்பில் மாணவிகள் அனுமதி: வரும் கல்வியாண்டு முதல் சேரலாம்

தமிழகத்தில் முதல்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சுரங்கப் பொறியியல் படிப்பில் மாணவிகள் வரும் கல்வியாண்டு முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சுரங்கப் பொறியியல் துறை 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு, இத்துறைக்கு போதுமான ஆதரவும், நிதி ஆதாரங்களும் இல்லாததால் 1969-ம் ஆண்டில் மூடப்பட்டது. மீண்டும், 1987-ம் ஆண்டு முதல் இத்துறை இயங்கி வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரே இளநிலை சுரங்கப் பொறியியல் துறை இதுதான். இந்தியாவில் 20-க்கும் குறைவான அரசு கல்வி நிறுவனங் களில்தான் இந்த படிப்பு உள்ளது. ஐஐடி-களில் காரக்பூரில் மட்டுமே இந்த படிப்பு உள்ளது.

சுரங்கச் சட்டம்-1952-ன் படி பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களில் பெண்கள் பணி புரியக்கூடாது. மேலும், பூமிக்கு மேலே உள்ள சுரங்கங்களிலும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பெண்கள் பணிபுரிய சட்டம் அனுமதிக் கிறது. இதனால், பெண்களுக்கு இந்த துறையில் ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும், இந்த படிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய 3 செய்முறை பயிற்சி களுள் ஒன்று, பூமிக்கு அடியில் சுரங்கப் பணி பயிற்சி மேற் கொள்வது. எனவே, பெண்களை சுரங்கப் பொறியியல் படிப்பில் இதுவரை அனுமதிக்கவில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டு களாக ஆந்திரம் போன்ற மாநிலங் களில் பெண்கள் அதிகளவில் சுரங்கப் பொறியியல் பட்டம் பெற்று, பூமிக்கு மேல் உள்ள சுரங்கங்கள் அல்லது திட்டத் துறை போன்றவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். மாணவிகளிடம் பெருகிவரும் வரவேற்பை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்திலும் இந்தத் துறையில் பெண்களை வரும் கல்வி ஆண்டு முதல் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த துறையில் 25 இடங்கள் உண்டு. இந்த ஆண்டு 30 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக சுரங்கப் பொறியியல் துறை தலைவர் டாக்டர். கே. னிவாஸ் கூறும்போது, “கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் பணி என்பதால், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பெண்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக, இந்த ஆண்டு முதல் அவர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பூமிக்கு அடியில் பணிபுரிய சட்டம் இன்னும் அனுமதிக்காததால் சுரங்க மேலாளராகவோ, திட்டத் துறை அதிகாரியாகவோ பணிபுரியலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x