Last Updated : 19 May, 2014 12:00 PM

 

Published : 19 May 2014 12:00 PM
Last Updated : 19 May 2014 12:00 PM

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு சாத்தியம் இல்லை- வேதனையில் டெல்டா விவசாயிகள்

தீராத பிரச்சினைகளில் விவசாயிக ளின் பிரச்சினையையும் சேர்த்து விடலாம். நடப்பு ஆண்டு குறுவை, சம்பா சாகுபடிகளைத் தொடங்க அவர்கள் தயாராக இருக்கும் நிலையில் மேட்டூர் நிலவரம் அவர்களுக்கு கைகொடுப்பதாக தெரியவில்லை என்பதுதான் வேதனை.

தற்போது பெய்த மழையால் விவசாயிகள் கோடை உழவு செய்து தயாராக உள்ளனர். இனி ஜூன் 12-ல் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டியதுதான் பாக்கி. மே மாதம் 19-ம் தேதியாகிவிட்ட நிலையில் 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூரின் தற்போதைய நீர்மட்டம் வெறும் 36 அடியாகத் தான் இருக்கிறது. அணையில் குறைந்தது 80 அடி இருந்தால்தான் பாசனத்துக்கு தண்ணீர் திறக் கப்படும். (கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி அணை திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 110 அடி.) இன்னும் பதினைந்து நாட்களுக்குள் தற்போதைய நிலையிலிருந்து மேலும் ஐம்பது அடியாவது நீர்மட்டம் உயர்ந்தால்தான் பாசனத்துக்கு அணையைத் திறப்பது பற்றி அரசு யோசனை செய்யும். ஆனால், அப்படி காவிரியில் நீர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை, அதனால் குறித்த தேதியில் அணையைத் திறக்க சாத்தியமே இல்லை என்கின்றனர் விவசாயிகள்.

தடுப்பணைகளில் தண்ணீர்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “காவிரி நீரை நமக்குத் தரக்கூடாது என்பதற்கா கவே கர்நாடகம் நீண்டகால திட்டங் கள் பலவற்றை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே இருக்கும் கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, கபினி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளிலும் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்பது கர்நாடகம் தற்போதெல்லாம் எடுத்து வைக்கும் வாதம்.

அந்த அணைகளில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், அந்த அணைகளில் முழு அளவு தண்ணீரையும் கொண்டு வந்து தேக்குவதற்கு பதிலாக இடையில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி அதில் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்கிறது. இதற்காக 2004-05-ம் ஆண்டில் உலக வங்கியின் கடனு தவி பெற்று சுமார் 6000 கோடி ரூபாய் செலவில் அங்கே பல தடுப்பணைகள் கட்டப்பட்டன. அங்கே தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கடந்த ஆண்டு வெற்றிகரமாக பல லட்சம் ஏக்கரில் கோடை சாகுபடி செய்தனர் விவசாயிகள்.

இதை கவனத்தில் கொண்டு நம் மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் கர்நாடக அணைகள் மற்றும் தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் மொத்த தண்ணீரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் நமக்குரிய தண்ணீரைப் பெறுவ தற்கு சட்டப்படி யான அல்லது தார்மிக ரீதியிலான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்.

5,300 கோடி ரூபாய் இழப்பு!

இந்த ஆண்டு தண்ணீர் கிடைப்பது உறுதியில்லை என்ப தால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் இறங்கவில்லை. மோட்டார் வசதியுள்ள சில விவசாயி கள் மட்டும்தான் கோடை சாகுபடி யில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் நேரடியாக சம்பா சாகுபடி செய்யப் போவதாக சொல்கிறார்களே தவிர குறுவை சாகுபடி செய்யப் போவதில்லை என்கிறார்கள். அதனால் இந்த ஆண்டும் குறுவைக்கு தமிழ் நாட்டில் விடுமுறைதான். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3,10,000 ஏக்கரில் வழக்கமாக குறுவை சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு குறுவை இல்லாததால் உற்பத்தி இழப்பு, வருவாய் இழப்பு, தொழிலாளர் இழப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டால் மொத்தமாக 5,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதாக புள்ளிவிவரங்கள் கூறு கின்றன.

மாநில அரசு தாமதிக்காமல் டெல்டாவை காப்பாற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பம் மற்றும் கோரிக்கை.

மாற்றுத் திட்டம் உடனே வேண்டும்

வீராணம் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் கூறுகையில், “ஆண்டுதோறும் விவசாயிகளுக்கும், விவசாயம் மூலமாக நாட்டுக்கும் ஏற்படும் உற்பத்தி மற்றும் வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பதில் அரசு ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டும். குறுவை இல்லாத மற்றும் சம்பா காலதாமதமாக தொடங்கும் ஒவ்வொரு ஆண்டையும் வறட்சி ஆண்டாக அறிவித்து மாற்றுத் திட்டங்களை அரசு செயல்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும். இந்த ஆண்டே நிலைமையை சமாளிப்பது குறித்து உடனடி திட்டங்களை அறிவிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x