Published : 04 May 2015 09:30 AM
Last Updated : 04 May 2015 09:30 AM

பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிச் சாலை திட்டம்: நாளை தாக்கலாகும் மசோதாவில் இடம்பெற வாய்ப்பு

மத்திய அரசின் நீர் வழிப் பாதை மசோதாவில் விஜயவாடாவையும் ஆந்திரத்தையும் இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப் போக்குவரத்துத் திட்டமும் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

சோழ மண்டல கடற்கைரைக்கு இணையாக ஓடும் பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய் ஆகும். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தொடங்கி தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்லும் இந்தக் கால்வாயின் மொத்த நீளம் 796 கிலோ மீட்டர். 1806-ல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக இந்தக் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் இக்கால்வாய் தென்னகத்தின் முதன்மையான நீர்வழிச் சாலை யாக இருந்தது.

துறைமுகங்களில் இருந்து சென்னை நகருக்குள் பொருட் களை கொண்டு செல்லும் சரக்குப் போக்குவரத்துக்கும் இந்த நீர்வழிச் சாலை பெரிதும் பயன்பட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு இந்தக் கால்வாய், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி நீர்வரத்து தடை பட்டதால் படிப்படியாக நீர்வழிப் போக்குவரத்தும் நின்றுபோனது. எனினும் சுனாமியின்போது பல்லாயிரக்கணக்கானவர்களை காப்பாற்ற இந்தக் கால்வாய் பெரிதும் பயன்பட்டது.

இந்நிலையில், பக்கிங்ஹாம் கால்வாயில் மீண்டும் நீர்வழிப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த கலீல் அகமது பாகவீ என்பவர் குவைத்திலிருந்து முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு, ‘தேசிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் திட்டமும் உள்ளது’ என பதில் கிடைத்துள்ளது.

இதனிடையே, அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் நிறுவன கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “ஆந்திரத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 110 ஆறுகளை நீர்வழிச் சாலைகளாக மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறார் நிதின் கட்கரி. இந்த மசோதாவில் பக்கிங்ஹாம் கால்வாய் போக்குவரத்துத் திட்டமும் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x