Last Updated : 26 May, 2015 04:12 PM

 

Published : 26 May 2015 04:12 PM
Last Updated : 26 May 2015 04:12 PM

கன்னியாகுமரி கோடை சீஸன் அடுத்த 5 நாட்களில் நிறைவு: குவியும் வடமாநில, கேரளா, கர்நாடகா பயணிகள்

கன்னியாகுமரியில் கோடை கால சீஸன் முடிய இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் கேரள, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில் கோடைகால சீஸன் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, வரும் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கன்னியாகுமரி படகு இல்லம், திரிவேணி சங்கமம், விவேகானந்தர் பாறை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதைத்தொடர்ந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளான விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகியவை காலையில் இருந்து மாலை வரை விவேகானந்தர் பாறைக்கு தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது சீஸன் முடியும் தருவாயை எட்டியுள்ளதால் அனைத்து வார நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு டிக்கெட் எடுப்பதற்காக நேற்று சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, படகு இல்லத்தைத் தாண்டி சன்னதி தெரு பகுதி வரை நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர் ஒருவர் கூறும்போது, “கோடைகால சீஸன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வடமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருகை தருகின்றனர். கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து வரும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. கேரளாவில் இருந்து வழக்கம்போல் அதிகமானோர் வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகளுக்கு முறையாக டிக்கெட் வழங்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் ஆர்வத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு பயணம் மேற்கொள்கின்றனர். தற்போது தினமும் 8 ஆயிரம் பேருக்கு மேல் படகு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

விவேகானந்தர் மண்டபத் துக்குச் செல்லும் வடஇந்திய சுற்றுலா பயணிகள், பகவதியம்மன் கால்பாதத்துடன் கூடிய நினைவகத்தையும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதனால் அங்கும் கூட்டம் அலைமோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x