Published : 26 May 2015 07:25 AM
Last Updated : 26 May 2015 07:25 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 50 நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் விநியோகம்

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேற்று குடும்ப அட்டைகள் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறார்கள் பிச்சை எடுப்பதை தடுப்பது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அறிவுரை குழுமக் கூட்டம் கடந்த 6 மாதத்துக்கு முன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி வட்டத்தில் உள்ள பெரியகுப்பம், பாக்கம், தாமரைப்பாக்கம், அலமாதி- முந்திரிதோப்பு, அனுப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் தங்களின் முதற்கட்ட ஆய்வை நடத்தியது.

இதில், அப்பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த 241 குடும்பத்தினர், தங்களின் 300-க் கும் மேற்பட்ட குழந்தைகளை பிச்சை எடுத்தல் மற்றும் ஜோசியம் பார்த்தல், சிறு பொருட்கள் விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வசிப்பிடம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, குழந்தைகள் பிச்சை எடுத்தல் உள்ளிட்ட செயல்களை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அந்த வகையில், திருவள்ளூர்- பெரியகுப்பத்தில் வசிக்கும் 52 நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பங்களில், 50 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், 50 நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x