Last Updated : 17 Apr, 2015 07:58 AM

 

Published : 17 Apr 2015 07:58 AM
Last Updated : 17 Apr 2015 07:58 AM

குஷ்புவுக்கு பதவி கிடைத்ததில் வருத்தம் இல்லை: கட்சிக்காக உழைத்தவர்களை அங்கீகரிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைப்பவர் களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏ விஜயதரணி கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். கட்சியில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மேடைகளில் மாநிலத் தலைவருக்கு இணையான முக்கியத்துவம் குஷ்புவுக்கும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 24-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக குஷ்பு நியமிக்கப்பட்டார்.

கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்து வரும் பெண் தலைவர்கள் பலர் இருக்கும்போது கட்சியில் இணைந்ததும் அகில இந்திய அளவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து பெண் நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக பேசத் தயங்கினாலும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி யுள்ளனர்.

இந்நிலையில், விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் எஸ்.விஜயதரணி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நடிகை குஷ்பு போன்ற பிரபலமா னவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வருவது வரவேற்கத்தக்கது. அவர்களின் பிரச்சாரம் கட்சிக்கும் வலுசேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிகர் எஸ்.வி.சேகர்கூட காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காததால் வேறு கட்சிக்கு சென்றுவிட்டார். எனவே, பிரபலமானவர்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாநிலப் பொதுச்செயலாளர், தேசிய செய்தித் தொடர்பாளர், தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் பொறுப்பாளர் என பல பதவிகளை வகித்துவிட்டேன். கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். அதனால் மற்றவர்களுக்கு பதவி கிடைத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

அதே நேரத்தில் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள், சொந்த நலனைவிட கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அவர்களை கட்சி வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு விஜயதரணி கூறினார்.

காங்கிரஸ் மகளிரணி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தேர்தலில் தோல்வியடைந்து காங்கிரஸ் இக்கட்டான நிலையில் இருந்தபோதுதான், குஷ்பு கட்சியில் இணைந்தார். அதை வரவேற்கிறோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குஷ்பு, நடிகர் வடிவேல் ஆகியோர் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர்.

ஆனாலும், அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையும் மனதில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே கட்சியில் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x