Published : 28 Apr 2015 09:08 PM
Last Updated : 28 Apr 2015 09:08 PM

மாற்றுத் திறனாளிகள் கட்டணச் சலுகை: 36 ரயில் நிலையங்களில் அடையாள அட்டை பெறலாம்

ரயில் கட்டணத்தில் சலுகை பெறத் தேவையான அடையாள அட்டையை மாற்றுத் திறனாளிகள் மேலும் 36 ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது. கவுன்ட்டர்கள் மட்டுமின்றி, ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதும் அவர்கள் சலுகை பெறும் விதமாக பிரத்தியேக புகைப்பட அடையாள அட்டையை ரயில்வே துறை வழங்குகிறது. இந்த அடையாள அட்டையைப் பெற முக்கியமான கோட்ட அலுவலகங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரத்தில் மட்டுமே இந்த அடையாள அட்டையை பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதுதவிர, அடையாள அட்டைகள் பெறுவதில் சில சிக்கல்களும் இருந்தன.

இந்த குறைகளை நீக்க ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் வசதி மேலும் பல ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், உதகமண்டலம், திண்டுக்கல், விருதுநகர், மானாமதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில், அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, புதுச்சேரி, கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் தெற்கு, திருச்சூர், சோரனூர், திரூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு, மங்களூர் ஆகிய 36 ரயில்நிலையங்களில் இனி மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையைப் பெறலாம்.

இந்த இடங்களில் அடுத்த 2 மாத காலத்துக்கு செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த சேவையைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கோட்ட முதுநிலை வணிக மேலாளருக்கு அனுப்பலாம். அல்லது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுளள 6 கோட்ட அலுவலகங்களில் நேரில் வந்து அளிக்கலாம். அல்லது மேற்கண்ட 36 ரயில் நிலையங்களில் விண்ணப்பங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் அளிக்கலாம்.

பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அடையாள அட்டை தயாரான பிறகு சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பித்த 3 வாரங்களில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகள் இந்த அடையாள அட்டையைப் பெற்ற பிறகு, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதும், கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறும்போதும் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து கட்டணச் சலுகை பெற முடியும்.

இவ்வாறு ரயில்வே தெரிவித்துள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x