Published : 30 Apr 2015 08:01 AM
Last Updated : 30 Apr 2015 08:01 AM

ஏ, பி கிரேடு கல்லூரிகளில் படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன்: இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது

கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 54 லட்சம் பேர் கல்விக் கடன் பெற்றுள்ளனர். இதில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் தமிழக மாணவர்கள். இந்நிலையில், கல்விக் கடனை வசூலிப்பதில் வங்கிகள் விதிமுறைகளை மீறி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காக, கல்விக் கடன் வழங்குவது, வசூலிப்பது குறித்த விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யுமாறு இந்திய வங்கிகள் சங்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பெரும்பாலான இடங்களில் வெறும் கட்டிடத்தை மட்டும் கட்டி வைத்துக்கொண்டு அடிப்படை வசதிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கல்லூரி நடத்துகிறார்கள். அங்கு படிப்பவர்களுக்கு சரியான வேலை வாய்ப்பும் கிடைப்பதில்லை. இதனால் அந்த மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதைத் தவிர்ப்பதற்காக, கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் ஏ, பி கிரேடு வழங்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யுமாறு இந்திய வங்கிகள் சங்கத்துக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவிகளுக்கான கல்விக் கடன் வட்டியில் தற்போது 0.5 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. இதை 1 சதவீதமாக உயர்த்தவும், படித்து முடித்து கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தவணை காலத்தை 6 மாதத்தில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளன.

கல்விக் கடனுக்கான விண்ணப் பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி கள் மூலமாகவே பெற்றால், தகுதி யுள்ள மாணவர்கள் சிரமமின்றி கல்விக் கடன் பெற முடியும். படிப்பு முடிந்த பிறகு மாணவரின் சொந்த ஊர் கிளைக்கு கடனை மாற்றலாம். கடன் கோரும் மாண வர்கள் வருமானச் சான்றிதழ் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் வருமான வரம்பின்றி அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடன் வழங்குவதில் விதிமீறி செயல்படும் வங்கிகள், வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட திருத்தங்களையும் கல்விக் கடன் திட்டத்தில் செய்யக் கோரி இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x