Published : 14 Apr 2015 10:39 AM
Last Updated : 14 Apr 2015 10:39 AM

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விற்பனை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கத்தை விட பொதுமக்கள் வரத்து அதிகமாக இருந்ததையொட்டி அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். மேலும் மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையோரத்தில் தள்ளுவண்டிகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

இத்தினத்தில் பூ விற்பனை முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து பூ வியாபாரி மூக்கையா கூறியதாவது: வழக்கமான நாட்களைவிட தமிழ் புத்தாண்டு தினத்தன்று பூக்கள் அதிகமாக விற்பனையாகும். அதற்கு ஏற்றார்போல் போதிய அளவு பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.400-க்கும், செவ்வரளி ரூ.300-க்கும், சாமந்தி ரூ.100-க்கும், மல்லி ரூ.240-க்கும், சம்பங்கி ரூ.400-க்கும், ரோஜா ரூ.140-க்கும், ஒரு தாமரை பூ ரூ.4-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது பொதுமக்கள் வரத்தும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜைக்கு தேவையான பொருட்களான தென்னை ஓலை தோரணம் ரூ.10-க்கும், ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.25 வரையும், பூசணிக்காய் ரூ.30 முதல் 60 வரையும், மாவிலை கொத்து ரூ.10-க்கும், ஒரு வாழை இலை ரூ.5-க்கும், ஒரு சீப்பு மஞ்சள் வாழைப்பழம் ரூ.40-க்கும், ஒரு கிலோ ஆப்பிள் ரூ.120-க்கும், ஆரஞ்சு ரூ.50-க்கும், சாத்துக்குடி ரூ.50-க்கும், மாதுளை ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x