Published : 13 Apr 2015 07:53 AM
Last Updated : 13 Apr 2015 07:53 AM

வேலூர், தி.மலை மாவட்டங்களில் பலத்த மழை: மின்னல் தாக்கி மாணவர் உட்பட 4 பேர் பலி

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கூட்டுறவு இணைப்பதிவாளர் மணி. இவரது மகன் விக்னேஷ் (23). இவர், குடியாத்தம் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனது நண்பர்கள் குடியாத்தம் அமனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் பாபு (23), உமாபதி மகன் அருண்குமார் (21), குமார் மகன் வேலாயுதம் (28), ரவி மகன் விஜய் (24), மற்றொரு ரவி மகன் கார்த்தி (25) மற்றும் குடியாத்தம் வாரியார் நகரைச் சேர்ந்த விநாயகம் மகன் ஜெகன் (23) ஆகியோருடன் நேற்று காலை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்.

பகல் 1.30 மணிக்கு வானம் இருண்டு திடீரென இடி, மின்னலு டன் மழை பெய்யத் தொடங்கியது. மரத்தின் அடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கியதில் 7 பேரும் மயங்கி கீழே விழுந்தனர்.

அங்கிருந்தவர்கள் 7 பேரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்தி மற்றும் ஜெகன் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர்.

அரக்கோணம் அடுத்த மூதார் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (27). இவர் தனது மாட்டை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். பலத்த மழை பெய்தபோது, மாடு மழையில் நனைந்தது. இதைக்கண்ட கேசவன் மற்றும் அவரது தாயார் தனம்மாள் (55) ஆகியோர் மாட்டை ஓட்டி வர மழையில் நனைத்தபடி நிலத்துக்கு சென்றனர். அப்போது கேசவன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற அவரது தாய் தனம்மாள் படுகாயமடைந்தார்.

ஆரணி

ஆரணி அருகே உள்ள வடுகசாத்து கிராமத்தில் வசிப்பவர் ரவி. கூலித் தொழிலாளி. இவரது மகன்கள் கோபி(16), அஜித்(14). இவர்கள் 2 பேரும், அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் மழை பெய்ததால், சாலையோரம் உள்ள மரத்தரடியில் ஒதுங்கி உள்ளனர். அப்போது மின்னல் தாக்கியதில் அஜித் உயிரிழந்தார்.

இதேபோல் திருவண்ணாமலை அடுத்த பழையமண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (32) என்பவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x