Published : 03 Apr 2015 09:34 AM
Last Updated : 03 Apr 2015 09:34 AM

அறுபத்து மூவர் விழா கோலாகலம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் விழா நேற்று உற்சாகமாகவும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெறும் பங்குனிப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரிய வட்டம், சந்திர வட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகார நந்தி, புருஷாமிருகம், சிங்கம், புலி, சவுடல் விமானம் ஆகிய வாகனங்களில் சுவாமிகள் வீதிஉலாவும் வெகு சிறப்பாக நடந்தன. தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்துமூவர் விழா நேற்று நடந்தது.

கண்கொள்ளாக் காட்சி

கோயில் வளாகத்தில் 63 நாயன்மார்கள் ஏராளமான பல்லக்குகளில் எழுந்தருளினர். விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆகியோரும் அருள்பாலித்தனர். சுவாமி பல்லக்குகள் வரிசையாக புறப்பட்டு பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி மாடவீதிகளில் உலா வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதைக் காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அன்னதானம்

மயிலாப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக இருந்தது. மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அபிராமபுரம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, சாந்தோம் உட்பட பல பகுதிகளிலும் அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பல இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு பானகம், நீர்மோர், குளிர்பானங்கள், சாக்லேட், பிஸ்கட் பாக்கெட் ஆகியவை வழங்கப்பட்டன.

விழாவை முன்னிட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடம் இருந்து நகை, பணம் பறிக்கும் செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x