

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வரவேற்கப்பட்ட அஷ்வத் , லவ் , குஷ் தன்வேஷ்
ராமேசுவரம்: ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தனுஷ்கோடி - தலைமன்னார் - தனுஷ்கோடி கடல் பகுதியை சென்னையை சேர்ந்த 4 சிறுவர்கள் நீந்திக் கடந்தனர்.
தமிழகத்தையும், இலங்கையையும் பாக் நீரிணை பிரிக்கிறது. ராமேசுவரம் தீவும், அதைத் தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் நீரிணையை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கின்றன. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் இதுவே ஆகும்.
பாக் நீரிணைப் பகுதியை தனியாகவோ, குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையிலும் பலர் நீந்திக் கடந்துள்ளனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த சிறுவர்களான ஸ்ரீ அஷ்வத் (11), லவ் (09), குஷ் (09), தன்வேஷ் (10) ஆகிய நான்கு பேரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோராக இருந்தாலும் யாதவி விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் சென்டரில் நீச்சல் பயிற்சி பெற்று பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏப்.18-ம் தேதி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பிற்பகல் 3.25 மணியளவில் 4 சிறுவர்களும் ரிலே முறையில் நீந்தத் தொடங்கி 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்கள் நீந்தி, இரவு 12.30 மணிக்கு தலைமன்னார் சென்றனர்.
உடனே, அங்கிருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.27 மணிக்கு தனுஷ் கோடி அரிச்சல்முனையை வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
இந்தச் சாதனைக்காக சிறுவர்கள் 4 பேரும் மொத்தம் 34 கடல் மைல் தொலைவை நீந்திக் கடக்க 18 மணி 2 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோரும் கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் நீந்த முடியும் என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.