

ரூ.6 லட்சம் கடன் தகராறில், கடன் கொடுக்க வேண்டியவரின் காரை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: ரூ.6 லட்சம் கடன் தகராறில், கடன் கொடுக்க வேண்டியவரின் காரை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் அபிகாஷ் (21). இவரின் சித்தப்பா மேகநாதன். இவர் கொளத்தூரில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். பழுதுநீக்கம் செய்யப்பட்ட வாடிக்கையாளரின் பி.எம். டபிள்யூ காரை கடந்த 4-ம் தேதி இரவு நங்கநல்லூர் மெட்ரோ அருகே உரிமையாளரிடம் ஒப்படைக்கும் படி அபிகாஷிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்.
அதன்படி, அபிகாஷ் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, நங்கநல்லூர் அருகே மற்றொரு காரில் வந்த 4 பேர் கும்பல், பி.எம்.டபிள்யூ காரை வழிமறித்து நிறுத்தியது.
பின்னர் அபிகாஷை தாக்கி, காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு, பி.எம்.டபிள்யூ காரை கடத்திச் சென்றது. இதுகுறித்து அபிகாஷ் அளித்த புகாரின் பேரில், புனித தோமையர்மலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காரை கடத்தியது காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரைச் சேர்ந்த கார்த்திக் (41), சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (51), புனித தோமையர்மலையைச் சேர்ந்த பிரசாத் (40) மற்றும் அவரது தம்பி ராமச்சந்திரன் (38) ஆகிய 4 பேர் என்பது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட பி.எம்.டபிள்யூ.கார் மீட்கப்பட்டது.
போலீஸார் நடத்திய விசாரணையில், பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் கார்த்திக்கிற்கு, பி.எம். டபிள்யூ. காரின் உரிமையாளரான சக்தி என்பவர் ரூ.6 லட்சம் கடன் கொடுக்க வேண்டி இருந்துள்ளது.
ஆனால், பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் ஆத்திரமடைந்த கார்த்திக், கொடுத்த கடனுக்கு பதிலாக சக்தியின், கார் பழுது நீக்கம் செய்யப்பட்டு அவரிடம் ஒப்படைக்கக் கொண்டு வரப்படுவதை அறிந்து, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிமறித்து காரை கடத்திச் சென்றது தெரியவந்தது.