Published : 03 Apr 2015 10:14 AM
Last Updated : 03 Apr 2015 10:14 AM

வாளையாறு பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கேரளத்துக்குச் செல்லும் அனைத்து நுழைவுப் பாதைகளிலும் லாரிகள் இயக்கப்படாது: லாரி உரிமையாளர் சங்கங்கள் அறிவிப்பு

`வாளையாறு சோதனைச் சாவடியில் ஏற்பட்டு வரும் காலதாமதப் பிரச்சினைக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு காண கேரள அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும் லாரிகள் இயக்கத்தை நிறுத்துவோம்’ என லாரி உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் குறைவான கவுன்ட்டர்கள் மட்டுமே இருப்பதால் இந்த சோதனைச் சாவடியை கடந்து செல்ல சரக்கு வாகனங்களுக்கு பல மணி நேரம் காலதாமதம் ஆகிறது. மூன்று கவுன்ட்டர்கள் மட்டுமே உள்ள இந்த சோதனைச் சாவடியில் 10 கவுன்ட்டர்கள் வரை அமைக்க வேண்டும். சோதனைச் சாவடியில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பிடம், தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என கேரள அரசிடம் கோரிக்கை வைத்து லாரி உரிமையாளர் சங்கங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன.

வேலைநிறுத்தம் 2-வது நாளாக நேற்று தொடர்ந்த நிலையில், கோவை உக்கடத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம், கேரள லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் டோல் கமிட்டிக் குழு தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா கூறியதாவது:

வாளையாறு பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி 2-வது நாளாக காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஏப்ரல் 2-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேரள முதல்வர் உம்மன்சாண்டியிடம் இருந்து அழைப்பு வந்தது. பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது, பண்டிகை காலமாக உள்ளதால் ஒரு வாரம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து பேச்சுவார்த்தையை திடீரென நிறுத்திவிட்டனர். இதுபோன்ற காரணம் ஏற்கத்தக்கதல்ல. இந்த வேலைநிறுத்தத்தால் கேரள மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் லாரி உரிமையாளர்கள் அல்ல, கேரள அரசின் அலட்சியமே.

நாங்கள் ஒன்றும் கேரள அரசிடம் யாசகம் கேட்கவில்லை. லாரி ஓட்டுநர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறோம். கேரள அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாடு முழுவதும் உள்ள 1,252 சோதனைச் சாவடிகளில் இல்லாத பிரச்சினை இந்த வாளையாறு சோதனைச் சாவடியில் மட்டும் உள்ளது. இங்கு சரக்குகளை எடைபோடும் இயந்திரம்கூட தனியாரிடம் உள்ளது. இதில், பல கோடி வசூல் செய்யப்படுகிறது. எனவே, தனியாரிடம் இருக்கும் எடை இயந்திரத்தை ரத்து செய்ய வேண்டும்.

வாளையாறு சோதனைச் சாவடியில் ஏற்பட்டு வரும் காலதாமதப் பிரச்சினைக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை கேரள அரசு எடுக்காவிட்டால், கேரளத்துக்குச் செல்லும் 18 சோதனைச் சாவடிகளிலும் லாரிகளை இயக்காமல் போராட்டம் தீவிரமடையும் என்றார்.

கேரளத்திலும்…

இது குறித்து கேரள லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கே.கே.ஹம்சா கூறும்போது, லாரி உரிமையாளர்கள் நடத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் எங்களைவிட லாரி ஓட்டுநர்களே மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். நாங்கள் 24 மணி நேரம் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் கேரளத்தில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் கேரளத்துக்குள் உள்ள எந்த லாரியையும் இயக்க மாட்டோம் என முடிவெடுக்க நேரிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x