Published : 22 Apr 2015 09:27 AM
Last Updated : 22 Apr 2015 09:27 AM

தமிழகத்தில் ஆந்திர போலீஸார் தேடுதல் வேட்டை: செம்மரக் கடத்தலில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் சிக்கினர் - சென்னை புறநகர் குடோன்களில் 6 டன் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து வெட்டிக் கடத்தப்படும் செம்மரக் கட்டைகள் தமிழகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னை புறநகர் பகுதி உட்பட பல இடங்களிலும் ஆந்திர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செம்மரக் கடத்தலில் மூளையாக செயல் படும் சரவணன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீஸார் கடந்த 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். பலியானவர்களின் செல்போன் களில் பதிவாகியிருந்த எண்களை தொடர்பு கொண்டு ஆந்திர போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தமிழகம், ஆந்திரத்தில் 16 இடைத்தரகர்களை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

ஆந்திரத்தில் வெட்டப்படும் செம்மரங்கள் தமிழகம், மேற்கு வங்கத்தில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அது மட்டுமின்றி, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், தொழிலதி பர்கள், ரவுடிகள் குறித்தும் ஆந்திர போலீஸாருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

செம்மரக் கடத்தலில் தொடர்புடைய வெளி மாநில நபர்களை பிடிக்கவும், ஆந்திரத்தில் வெட்டப்பட்டு வெளி மாநிலங்களில் பதுக்கப் பட்டிருக்கும் செம்மரங்களை பறிமுதல் செய்யவும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாஸ் தலைமையில் 80 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் 40 பேர் தமிழகத்திலும், 40 பேர் மேற்கு வங்கத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வந்த ஆந்திர போலீஸார் 4 பிரிவுகளாக பிரிந்து கும்மிடிப்பூண்டி, ஆவடி, செங்குன்றம், சோழவரம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். பல்வேறு குடோன்களில் பதுக்கப்பட்டிருந்த 6 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். செம்மரக் கடத்தலில் மூளையாக செயல் பட்ட சரவணன் மற்றும் வியாசர் பாடியை சேர்ந்த முனியாண்டி, கர்ணா உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

‘தி இந்து’ சொன்ன அதே சரவணன்!

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செம்மரம் கடத்தும் தொழிலில் சரவணன் என்ற நபர்தான் மூளையாக இருக்கிறார் என்று, என்கவுன்ட்டர் சம்பவம் நடந்த 2-வது நாளில் (ஏப்ரல் 9-ம் தேதி) ‘தி இந்து’ இதழில் விரிவாக செய்தி வெளியானது. அந்த சரவணன்தான் தற்போது ஆந்திர போலீஸிடம் சிக்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x