Published : 13 Apr 2015 06:00 PM
Last Updated : 13 Apr 2015 06:00 PM

சென்னையில் பள்ளிச் சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி: தமிழக அரசு நிதியுதவி

சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மரணமடைந்த இரு மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' சென்னை, அடையாறு, பெசன்ட் அவென்யூவில் உள்ள தனியாரால் நடத்தப்படும் அவ்வை ஹோம் டி.வீ.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (13.4.2015) மதியம் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில், ஊரூர்குப்பம் பகுதியிலிருந்து அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் நந்தினி, மோனிஷா மற்றும் சந்தியா ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.

காயமடைந்த மாணவிகள் அடையாறிலுள்ள மலர் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் மாணவியர் நந்தினி மற்றும் மோனிஷா ஆகியோர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டனர் என்று மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டு, அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டது.

காலில் பலத்த காயமடைந்துள்ள சந்தியா என்ற மாணவி உள்நோயாளியாக அடையாறிலுள்ள மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவியர் நந்தினி மற்றும் மோனிஷா ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மலர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி சந்தியாவின் முழு மருத்துவ செலவினையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். முதற்கட்டமாக ரூ.30,000 தமிழக அரசால் மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x