Published : 07 Apr 2015 10:51 AM
Last Updated : 07 Apr 2015 10:51 AM

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே முதல்கட்ட ஆய்வு நிறைவு: இம்மாத இறுதியில் மெட்ரோ ரயில் ஓடும் என அதிகாரிகள் நம்பிக்கை

கோயம்பேடு ஆலந்தூர் இடையில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். நேற்று முதல்கட்ட ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் 2-ம் கட்ட ஆய்வுகள் நடக்கவுள்ளன.

சென்னையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரையும் என இரு பாதைகளில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2009-ம் ஆண்டுமுதல் நடைபெற்று வருகின்றன.

பெங்களூருவில் இருந்து வருகை

இவற்றில், இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடைப்பட்ட 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இங்கு ரயில் சேவை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுப் பணிகள் நேற்று நடைபெற்றன. இதற்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் மற்றும் துணை ஆணையர்கள் இருவர் என 3 பேர் கொண்ட குழுவினர் பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை வந்தனர்.

ரயில் வேகம், பிரேக் ஆய்வு

கோயம்பேடு ரயில் நிலையம் அருகே ஆணையர் மிட்டல் மரக்கன்று நட்டார். பின்னர், காலை 10.15 மணிக்கு ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. கோயம்பேடு ஆலந்தூர் இடையே ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின்போது, ரயில் பெட்டிகளில் உள்ள தானியங்கி கதவுகள் செயல்படும் விதம், சிக்னல்களின் செயல்பாடுகள், அவசர கால பாதுகாப்பு அம்சங்கள், ரயில் இயக்கம், ரயில் செல்லும் வேக அளவு, தானியங்கி பிரேக் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பிற்பகலில் மெட்ரோ ரயில் பணிமனையில் உள்ள பராமரிப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் கூறும்போது, ‘‘கோயம்பேடு ஆலந்தூர் இடையே ஆய்வுப் பணிகள் நடத்தப்படவுள்ளன. இன்று (நேற்று) நடக்கவுள்ள முதல்கட்ட ஆய்வின்போது, ரயில் இன்ஜின், சிக்னல்கள், ரயில் பாதைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும். இது தொடர்பான அறிக்கையை தயார் செய்து ஒரு வாரத்துக்குள் மத்திய ரயில்வே வாரியத்துக்கு அனுப்புவோம். இதற்கு ரயில்வே வாரியத்தில் இருந்து ஒப்புதல் அறிவிப்பு வந்ததும், 2-ம் கட்ட ஆய்வுப் பணிகளை நடத்துவோம். அப்போது, ரயில் நிலையங்கள், பயணிகளின் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.

அதிகாரிகள் திருப்தி

மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு ஆலந்தூர் இடையே நடந்த முதல்கட்ட பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றன. ஆய்வில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதாக நம்புகிறோம். மொத்தம் 3 நாட்களுக்கு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அடுத்தகட்ட ஆய்வு ஓரிரு வாரங்களில் தொடங்கும். அப்போது, திட்டமிட்டபடி 2 நாட்களுக்கு ஆய்வுப் பணிகள் நடக்கும். அனைத்து ஆய்வுப் பணிகளும் நிறைவடைந்தவுடன் இம்மாத இறுதியில் மெட்ரோ ரயில் ஓடும் என எதிர்பார்க் கிறோம்.

இதற்கான தொடக்க விழா தேதியை தமிழக அரசு அறி விக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x