Last Updated : 03 Apr, 2015 08:40 AM

 

Published : 03 Apr 2015 08:40 AM
Last Updated : 03 Apr 2015 08:40 AM

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்: ஆந்திர அரசுடன் பேச தமிழக அதிகாரிகள் விரைவு

உள்ளூர் விவசாயிகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக சென்னைக்குத் தரவேண்டிய கிருஷ்ணா நீரை ஆந்திர அதிகாரிகள் நிறுத்திவைத்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தமிழக பொதுப்பணித் துறையினர் நேற்று ஆந்திரம் விரைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் தரப்படுகிறது. சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க கிருஷ்ணா நீர் உதவியாக இருக் கும். இந்த ஆண்டில் இதுவரை 4.7 டிஎம்சி மட்டுமே ஆந்திரம் தந்துள்ளது. மழை குறைவால் அங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, ஆந்திர பொதுப் பணித் துறையினர் தண்ணீரை முழுவதுமாக திறக்காமல் சிறுகச் சிறுக கொடுத்துவந்தனர். கடந்த 20-ம் தேதிக்கு பிறகு தண்ணீரை ஒரேயடியாக நிறுத்திவிட்டனர்.

இதற்கிடையே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. பூண்டி ஏரியில் தற் போது தண்ணீர் அளவு 74 மில்லி யன் கனஅடியாக (முழு கொள்ள ளவு 3231 மி.க.அடி.) உள்ளது. சோழவரத்தில் 62 மில்லியன் கன அடியும் (881 மி.க.அ), ரெட்ஹில் ஸில் 1,489 மில்லியன் கனஅடி யும் (3,300 மி.க.அ.), செம்பரம்பாக் கத்தில் 858 மில்லியன் கனஅடி நீரும் (3,645 மி.க.அ.) இருப்பு உள்ளது. சென்னை ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டிஎம்சி. இதில், தற்போது 2.48 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 3.05 டிஎம்சியைவிட இது குறைவு.

சென்னைக்கு தினமும் ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. மேற்கண்ட ஏரிகளில் இருந்து தினசரி வரவேண்டியதில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தற்போது தண்ணீர் விநியோகிக்கப் படுகிறது. எஞ்சிய தண்ணீரை கடல்நீர் சுத்திகரிக்கும் 2 ஆலை கள், வீராணம் ஏரி நீர், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் வாரியம் சமாளிக்கிறது. ஆனாலும், குடிநீர் விநியோகம் என்பது பொதுப்பணித் துறைக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

எனவே, கிருஷ்ணா நீரைத் திறக்குமாறு ஆந்திர பொதுப் பணித் துறையினரை தமிழக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதத் தில் ஆந்திரத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்துக்குத் தரவேண்டிய கிருஷ்ணா நீரைத் திறந்துவிடும்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்துக்கு நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப் படும் நீர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழக எல்லையில் நுழையும்போது பெரிதும் குறைந்துவிடுகிறது. வழி நெடுகிலும் இந்த தண்ணீரை ஆந்திர விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்காக முறைகேடாக உறிஞ்சிவிடுகின்றனர்.

இதுபற்றி ஆந்திர அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகி றோம்.

தற்போது திறந்தால் ஆந்திர விவசாயிகள் அடுத்த போகத்துக் குப் பயிரிட வழிவகுக்கும் என்பதால், ஒரு வாரகாலத்துக்குப் பிறகு திறப்பதாக ஆந்திர அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதை உறுதிசெய்துகொள்ள பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஹைதராபாத் சென்றுள்ளனர். சென்னை ஏரிகளில் தற்போதுள்ள நீர் இருப்பை வைத்து ஜூன் மாதம் வரை சமாளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x