Last Updated : 06 Apr, 2015 06:48 PM

 

Published : 06 Apr 2015 06:48 PM
Last Updated : 06 Apr 2015 06:48 PM

தமிழகத்தில் முதலிடம்: தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடி சாதனை

தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி 220 நாட்களில் ரூ.3 கோடிக்கு காய்கறிகள் விற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

விவசாயிகளின் விளை பொருட் களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை யில் மட்டும் 50 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் தொடங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கப் பட்டன.

தூத்துக்குடி அங்காடி

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் கடந்த 2014 ஆகஸ்ட் 23-ம் தேதி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி தொடங்கப்பட்டது.

சுமார் 600 சதுரஅடி கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட, இந்த அங்காடிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அங்காடி சுமார் 1,600 சதுரடி பரப்பளவில் 2 அறைகளாக முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மேலும், காய்கறிகளை இருப்பு வைத்து தரம் பிரிப்பதற்கு ஏதுவாக 900 சதுரடி பரப்பளவில் 2 சேமிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு துல்லியமான எடை மற்றும் சரியான விலையில் காய்கறிகளை வழங்க ஏதுவாக 8 கணினி பில்லிங் இயந்திரங்கள் உள்ளன.

இந்த அங்காடியில் தற்போது 20 பணியாளர்கள் பச்சைநிற சீருடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இதில் சங்கத்தின் 3 பணியாளர்களும், வெளிச்சேவை முறை மூலம் 17 பணியாளர்களும் உள்ளனர்.

காய்கறி கொள்முதல்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன. மதுரை, பாவூர்சத்திரம், ஒட்டன்சத்திரம் மற்றும் திருநெல்வேலி மொத்த சந்தைகளில் இருந்தும் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் விலை விபரம் குறித்து தினசரி காலை 6 மணிக்கு வேளாண் வணிகத்துறை மூலம் அறிக்கை பெறப்பட்டு, பின்னர் காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மொத்த சந்தை விலைக்கு இணையாக அல்லது அதை விட குறைவாகவும், உள்ளூர் சில்லரை விற்பனை விலைக்கு குறைவாகவும் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த கடையில் காய்கறிகள் தரம் பிரித்து விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. தினசரி கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளில் விற்பனை செய்தது போக மீதி இருப்பு இரவு 9 மணிக்கு சரிபார்க்கப்படும். மீதமுள்ள காய்கறிகளை மறுநாள் விற்பனைக்கு எடுத்துக் கொள்ளும் போது தரமற்ற காய்கறிகள் கழிவாக ஒதுக்கப்படுகின்றன.

இந்த கழிவு காய்கறிக்கான தொகை கணக்கீடு செய்யப்பட்டு, அத்தொகையை மாநில அரசின் விலை சமப்படுத்தும் நிதியிலிருந்து பெற்றுக் கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் சாதனை

இக்கடை மூலம் தினசரி சுமார் 3 முதல் 4 டன் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது தினசரி சராசரியாக ரூ.1,35,435-க்கு விற்பனை நடைபெறுகிறது. ஒரே நாளில் அதிகபட்சமாக கடந்த ஜனவரி 13-ம் தேதி ரூ.3,42,236-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த கடைக்கு தினசரி சுமார் 800 முதல் 1000 நுகர்வோர் வரை வந்து காய்கறி வாங்கிச் செல்கின்றனர். மேலும் இந்த அங்காடியின் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியால் நடத்தப்படும் 10 அம்மா உணவகங்களுக்கு தினசரி ரூ.10 ஆயிரம் அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடை தொடங்கப்பட்டது முதல் நேற்றுமுன்தினம் வரை 225 நாட்களில் 5 விடுமுறை தினங்கள் நீங்கலாக 220 நாட்களில் 10,94,339 கிலோ காய்கறிகள் ரூ.2,98,49,724-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைக்கப்பட்டு ள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலேயே தூத்துக்குடி தான் முதலிடத்தில் உள்ளது. இது தொடர்பாக அரசின் விருதையும் இந்த கடை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியர் பாராட்டு

மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் கூறும்போது, ‘மக்கள் பிரதிநிதி களும், அரசு அலுவலர்களும் இணைந்து செயல்பட்டதே இந்த வெற்றிக்கு காரணம். இந்த கடை 75 நாளில் ரூ.1 கோடிக்கும், 145 நாளில் ரூ.2 கோடிக்கும், 220 நாளில் ரூ. 3 கோடிக்கும் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி தொடங்கப்பட்ட பிறகு தூத்துக்குடி மாநகரத்தில் வெளிச் சந்தையில் காய்கறி விலை கட்டுப் படுத்தப்பட்டுள்ளது’ என்றார் அவர்.

நுகர்வோர் பாராட்டு

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கே. முருக லெட்சுமி கூறும்போது, ‘இந்த கடையில் நான் ரெகுலராக காய்கறி வாங்குகிறேன். இங்கு காய்கறிகள் தரமானதாக கிடைக்கின்றன. காய்கறிகளை நாங்களே தேர்ந்தெடுத்து வாங்குவதால் தரமான காய்கறிகளை எங்களால் எடுக்க முடிகிறது. மேலும், எடை மிகவும் துல்லியமாக இருக்கிறது. மற்ற காய்கறி கடைகளை விட விலை குறைவாக இருப்பதால் எங்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை மிச்சமாகிறது. இதுபோன்ற பண்ணை பசுமை காய்கறி கடைகளை அதிகம் திறக்க வேண்டும்’ என்றார் அவர்.

தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் ஆர்வமுடன் காய்கறிகள் வாங்கும் மக்கள். படம்: என்.ராஜேஷ்

சாதனை சிறப்பு விழா!

தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் 220 நாளில் ரூ.3 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று சிறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், கூட்டுறவுத் துறை அதிகாரிகளையும், கடை நிர்வாகிகளையும் பாராட்டினார்.

மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் மாணிக்கராஜா, வேளாண்மைத் துறை துணை இயக்குநர் கனகராஜ், கூட்டுறவு துணை பதிவாளர் சிவகாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ் செல்வராஜன் கலந்து கொண்டனர்.

மொத்த சந்தை விலைக்கு இணையாக அல்லது அதை விட குறைவாகவும், உள்ளூர் சில்லரை விற்பனை விலைக்கு குறைவாகவும் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x