Last Updated : 13 Apr, 2015 08:17 AM

 

Published : 13 Apr 2015 08:17 AM
Last Updated : 13 Apr 2015 08:17 AM

கருணாநிதி, ஸ்டாலினிடம் தனித்தனியாக தேர்தல் நிதி: ஒரு மாதத்தில் ரூ.2.20 கோடி வசூல்

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் இருவரிடமும் திமுகவினர் தனித்தனியாக தேர்தல் நிதி வழங்கி வருகின்றனர். ஒரு மாதத்தில் தேர்தல் நிதியாக ரூ.2.20 கோடி வசூலாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தாராளமாக நிதி அளிக்குமாறு திமுகவினருக்கு கடந்த மாதம் 11-ம் தேதி கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். மறுநாளே ரூ.1,00,001 நிதி அளித்து வசூலை கருணாநிதி தொடங்கி வைத்தார். முதல் நாளில் ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் வசூலானது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், பொதுச்செயலாளர் க.அன் பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகி யோர் தலா ரூ. 1 லட்சத்தை கருணாநிதியிடம் வழங்கினர். கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு ரூ.25 ஆயிரம் வழங்கினார்,

கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் என அனைத்துத் தரப்பினரும் தினமும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தேர்தல் நிதி வழங்கி வருகின்றனர். ஏப்ரல் 11-ம் தேதி வரை ஒரு மாதத்தில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 99 ஆயிரத்து 376 வசூலாகியுள்ளது.

இரட்டை நிதியளிப்பு

முன்பெல்லாம் திமுகவில் யாராக இருந்தாலும் கட்சித் தலைவர் கருணாநிதியிடம்தான் நிதி வழங்குவர். ஆனால், இப் போது மூத்த தலைவர்கள், நிர்வாகி கள் அனைவரும் கருணாநிதியிடம் ஒரு தொகையும் ஸ்டாலினிடம் ஒரு தொகையும் என தனித்தனியாக நிதி வழங்கி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், இளைஞரணி இணைச் செய லாளர் மு.பெ.சாமிநாதன், தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் துறைமுகம் காஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அன்பழகன் எம்எல்ஏ, தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியிடம் ரூ.50 ஆயிரம், ஸ்டாலினிடம் ரூ. 50 ஆயிரம் என தனித்தனியாக நிதி வழங்கியுள்ளனர்.

திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேற்று முன்தினம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது அவரிடம் ஏராளமான இளைஞரணியினர் தேர்தல் நிதி வழங்கினர். ஸ்டாலின் கட்டுப்பாட்டில் திமுக வந்துவிட்டதையே இது காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x