Published : 22 May 2014 12:07 PM
Last Updated : 22 May 2014 12:07 PM

முதல் 6 மாதத்திற்கு பாஜக ஆட்சியை விமர்சிக்காதீர்கள்: பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பாஜக ஆட்சி அமைக்கும் நாளிலிருந்து அடுத்த 6 மாத காலம் வரை எந்த விமர்சனங்களையும் முன் வைக்க வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதன்பிறகு முதன் முறையாக கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

பாஜக ஆட்சி அமைத்திருக்கும் இந்த நேரத்தில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அவரது அசைவுகளை கண்காணித்து வருகின்றன. நரேந்திர மோடியின் ஆட்சி நிச்சயம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். ஏனென்றால் அவர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஆற்றிய முதல் உரையிலேயே அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் தனது லட்சியம் என கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த இந்தியாவிற்காக நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளார் தமிழக மக்களும் அவருக்கு தங்களது ஆதரவை தர வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி 19% வாக்கு வங்கியினை பெற்றுள்ளது. நாங்கள் வெற்றி பெற்ற இடங்கள் குறைவு என்றாலும், வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகும். இம்முறை பாஜக 5.5% வாக்குகளை பெற்று தமிழகத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

1967-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தபோது, பெருந்தலைவர் காமராசர் 6 மாத காலம் எந்த விமர்சனமும் செய்யமாட்டேன் என்று அரசியல் நாகரிகத்துடன் அறிவித்தார். எனவே பொதுமக்களும் மற்ற அரசியல் கட்சிகளும் 6 மாத காலத்திற்கு பாஜகவின் ஆட்சி மீது எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைக்கக் கூடாது என்று வைகோ கூறி இருக்கிறாரே?

ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து விருந்து வைக்கும் எண்ணம் எமக்கும் இல்லை. சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்களை அழைக்கிற நோக்கில் அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ராஜபக்சேவுக்கு அழைப்புவிடுத்ததற்கும், பாஜக அழைப்பு விடுத்திருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

ராஜபக்சே வருவதால் பதவியேற்பு நிகழ்ச்சியை ஜெயலலிதா புறக்கணித்துள்ளார், இதனால் மத்திய மாநில அரசுகளின் உறவு பாதிக்குமா?

மத்திய, மாநில அரசுகளின் உறவு எப்போதும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சொல்லப் படுகிறதே?

நான் அமைச்சராவேன் என எதிர்பார்த்து தேர்தலில் போட்டியிடவில்லை. நான் அமைச்சராவேன் என்று சொல்லி என் தொகுதி மக்களிடம் ஓட்டும் கேட்கவில்லை. பாஜக தலைமைக்கு யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்று நன்றாக தெரியும்.

தமிழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சுகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா?

பாஜகவின் தலைவர் அப்படி பேசியிருந்தால்தான் அப்படியொரு சூழ்நிலை எனக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x