Published : 11 Apr 2015 10:01 AM
Last Updated : 11 Apr 2015 10:01 AM

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,600 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறப்பு: ஏப். 14-ல் தமிழக எல்லையை வந்தடையும்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,600 கன அடி வீதம் கிருஷ்ணா நதி நீர் நேற்று திறக்கப்பட்டது. வரும் 14-ம் தேதி தமிழக எல்லையை கிருஷ்ணா நதி நீர் வந்தடையும் என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக தமிழகம் - ஆந்திரம் இடையே தெலுங்கு- கங்கை ஒப்பந்தம் 1983-ல் கையெழுத் தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என மொத்தம் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு ஆந்திரம் வழங்க வேண்டும்.

அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த மாதம் 20-ம் தேதி வரை 4.751 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை மட்டுமே தமிழகத்துக்கு ஆந்திர அரசு வழங்கியுள்ளது. அதன்பிறகு, கிருஷ்ணா நதி நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதால், சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக 11,057 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு விரைவாக குறைந்துவிட்டது.

நேற்றைய நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 65 மில்லியன் கன அடியாகவும், 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 50 மில்லியன் கன அடியாகவும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் இருப்பு 1,390 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 806 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி 2.984 டிஎம்சி நீர் இருப்பு இருந்த இந்த ஏரிகளில், தற்போது 2.311 டிஎம்சி மட்டுமே நீர் இருப்புள்ளது.

எனவே, கடந்த மாதம் 31-ம் தேதி தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், கிருஷ்ணா நதி நீர் கேட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கடந்த 2-ம் தேதி தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திரத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தமிழக முதல்வரின் கடிதம் மற்றும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் பேச்சு வார்த்தை ஆகியவற்றின் விளை வாக நேற்று காலை 10 மணியள வில், கண்டலேறு அணையிலி ருந்து கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது. மாலை நிலவரப்படி அணையிலிருந்து வினாடிக்கு 1,600 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

வருகிற 14-ம் தேதி மாலை அல்லது 15-ம் தேதி அதிகாலை தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தில் உள்ள ‘ஜீரோ பாயிண்ட்டை’ கிருஷ்ணா நீர் வந்தடையும் என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x