Published : 27 Apr 2015 06:12 PM
Last Updated : 27 Apr 2015 06:12 PM

திருவண்ணாமலையில் சேமிப்புக் கிடங்கானது அம்மா உணவகம்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம், சேமிப்புக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.

மலிவு விலையில் உணவு வழங்கப்படும் என்று அறிவித்து, தமிழகம் முழுவதும் ‘அம்மா உணவகங்கள்’ திறக்கப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு மற்றும் வந்தவாசியில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு உணவு தயாரிக்கும் அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தயாராக இருந்தும் அம்மா உணவகங்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு காலியாக இருக்கும் அம்மா உணவகம் சேமிப்புக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில், தமிழக அரசு வழங்கும் இலவச மிக்ஸி, மின் விசிறி, கிரைண்டர் ஆகியவற்றை சேமித்து வைக்கும் கிடங்காக நகராட்சி நிர்வாகம் பயன்படுத்த தொடங்கிவிட்டது.

இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் கூறும்போது, “நகர பகுதிக்கு வழங்கும் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க இடம் இல்லாததால் அம்மா உணவகத்தில் பொருட்களை வைத்துள்ளோம்” என்றனர்.

நகர மக்கள் கூறும்போது, “உணவகங்களில் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மலிவு விலைக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, கட்டுமானப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று முடிந்தது. அனைத்தும் தயாராக இருந்தும், அம்மா உணவகம் திறக்கப்படாமல் உள்ளது. சேமிப்புக் கிடங்காக பயன்படுத்தும் நிலைக்கு அம்மா உணவகம் தள்ளப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வேறு பணிக்கு மாற்றப்பட்டுவிடும். பல கோடி ரூபாய் மதிப்பில் அம்மா உணவகங்கள் கட்டப்பட்ட நோக்கம் நிறைவேறுவது சிரமம்’’ என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x