Published : 14 Apr 2015 04:05 PM
Last Updated : 14 Apr 2015 04:05 PM

அம்பேத்கர் பிறந்தநாளில் அனைவருக்கும் சம உரிமை வழங்க சபதம் ஏற்போம்: மு.க.ஸ்டாலின்

அம்பேத்கர் பிறந்தநாளில் அனைவருக்கும் சம உரிமை வழங்க சபதம் ஏற்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக்கில் இட்டுள்ள பதிவில், "அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிட மக்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மாணவர்களின் எதிர்காலத்திலும் அக்கறை செலுத்துவதில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2014-15-ம் கல்வி ஆண்டில் அனைத்துப் படிப்புகளிலும் கல்வி பயிலும் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை.

இவர்களில் பொறியியல் படிக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுத முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இந்த கல்வியாண்டில் உதவித்தொகையாக ரூபாய் 1100 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை 140 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது.

இந்த காரணத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு அதிகாரிகள், "மத்திய அரசிடமிருந்து மீதித் தொகை வந்தவுடன் கல்வி உதவித் தொகை செலுத்தப்படும்" என்று கூறி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத முடியாத ஆபத்தான சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்றதொரு நிலைமை 2013-14 கல்வியாண்டில் ஏற்பட்டு பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் இடை விலகல் ஆகியுள்ளனர். அதைக் கூட இந்த அரசு மனதில் கொள்ளாமல், இந்த வருடமும் அதே பிரச்சினை உருவாக விட்டு விட்டு மெத்தனமாக இருக்கிறது அ.தி.மு.க. அரசு.

ஆகவே ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனே மாநில அரசு செலுத்தி, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த இந்த நாளில் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x