Published : 09 Mar 2015 10:44 AM
Last Updated : 09 Mar 2015 10:44 AM

ஏழை, எளிய மக்களுக்கானதாக தமிழக பட்ஜெட் இருக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் அறிவுறுத்தல்

கோவையில் அண்மையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், நேற்று சொந்த மாவட்டமான திருவாரூர் வந்த முத்தரசனுக்கு, திருவாரூர் ரயில் நிலையத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே. உலகநாதன் ஆகியோர் தலைமை யில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், கட்சி அலுவலகத்தில் முத்தரசன் அளித்த பேட்டி: தமிழகத் தில் ஆறுகள், விளைநிலங்கள், மலைகள், கனிம வளங்கள், நீராதாரங்கள் அனைத்தும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. கல்வி, மருத்துவம் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. வேலை நிய மனங்களில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது. கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மதுக் கொள்கையால் சமுதாயம் சீரழிந்து வருகிறது.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மீத்தேன் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து புதுச்சேரியில் நடைபெற உள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டிலும் விரிவாக விவாதித்து, போராட்டம் அறிவிக்கப்படும்.

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவானது. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயனளிக்காத பட்ஜெட். ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தமிழக அரசின் பட்ஜெட் ஏழை, எளிய மக்களின் நலனை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x