Published : 06 Mar 2015 02:37 PM
Last Updated : 06 Mar 2015 02:37 PM

கோப்பையை இந்தியா வென்றால் இந்த ஆட்டோவை நாடுங்கள்!

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றால் உங்களில் எத்தனை பேர் உங்கள் இரண்டு நாள் சம்பளத்தை தியாகம் செய்யத் தயாராக இருப்பீர்கள்?

நிறைய பேர் நிச்சயம் இருக்க மாட்டார்கள். ஆனால் சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆட்டோக்காரர் தயாராக இருக்கிறார். ஆம் , இந்தியா கோப்பையை வென்றால் பொது மக்களுக்கு இரண்டு நாட்களாக இலவச ஆட்டோ சவாரி வழங்கத் தயாராக இருக்கிறார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்தவர் ஸ்பீடு முருகேஷ். ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்களில் அவரது ஆட்டோ மட்டும் பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

காரணம், ஸ்பீடு முருகேஷ் ஆட்டோவில் தோனி, கோலி படங்கள் அச்சிடப்பட்ட பேனரை வைத்துள்ளார். கவன ஈர்ப்புக்கு அது மட்டும் காரணமல்ல. அந்த பேனரில், 9551535383 என்ற அவரது மொபைல் எண் அச்சிடப்பட்டு. இந்தியா வெற்றி பெற்றால் இந்த எண்ணுக்கு அழையுங்கள், இலவசமாக ஆட்டோவில் செல்லுங்கள் என்ற சலுகை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து ஸ்பீடு முருகேஷ் கூறும்போது, "சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியில் கிரிக்கெட் அணியில் விளையாடியிருக்கிறேன். இப்போதும், நேரம் கிடைத்தால் கோபாலபுரம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுகிறேன்.

ஒருநாளைக்கு சராசரியாக ரூ.1000 வரை சம்பாதிப்பேன். மற்ற செலவுகள் போக ரூ.700 வரை லாபம் சம்பாதிப்பேன். எனவே இந்தியா உலகக் கோப்பையை வென்றால் என் இரண்டு நாள் சம்பாத்தியம் ரூ.1500-ஐ செலவிட முடிவு செய்துள்ளேன். காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை இரண்டு நாட்களுக்கு இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்வேன். நகரின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பயணிகளை அழைத்துச் செல்வேன்.

இதேபோல் கடந்த 2011-ல், இந்தியா வெற்றி பெற்றபோது எனது வாடகை ஆட்டோவில் பயணிகளை இலவசமாக அழைத்துச் சென்றேன். என்னைப் பாரட்டி தமிழ்நாடு கிரிகெட் சங்கம் ரூ.1 லட்சம் பரிசு வழங்கியது. அந்தப் பணத்தை வைத்தே இந்த ஆட்டோவை வாங்கினேன்.

கிரிக்கெட் மீது எனக்குள்ள ஆர்வம் மற்றும் என் திறமையை பாராட்டும் வகையில் என் நண்பர்கள் எனக்கு ஸ்பீடு என்ற அடைமொழியை வழங்கினர்.

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

நான் இப்போது, போரூரில் வசிக்கிறேன். எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது பேட், பால் வாங்கித் தருவேன். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, எங்கள் ஏரியாவில் பெரிய திரையில் அதை ஒளிபரப்பச் செய்வேன்" என்றார்.

எல்லாவற்றையும் கூறிவிட்டு ஆட்டோவைக் கிளப்பிய ஸ்பீடு முருகேஷ், "இந்திய அணி சிறப்பான அணி. எனவே, இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x