Published : 19 Mar 2015 10:19 AM
Last Updated : 19 Mar 2015 10:19 AM

கணிதத் தேர்வு எளிதாக இருந்ததாக பிளஸ் டூ மாணவர்கள் மகிழ்ச்சி: விலங்கியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கருத்து

பிளஸ் டூ கணிதத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் பலர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பிளஸ் டூ தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏழாவது நாளான நேற்று கணிதம், விலங்கியல், நுண்ணுயிரி யல், நியூட்ரிஷன் மற்றும் டயட் டிக்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

கணிதம், விலங்கியல் தேர்வு மதிப்பெண் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேருவதற்கு முக்கியம் என்பதால் வழக்கமான கல்வித் துறையினரின் பறக்கும் படைகளுடன் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையிலும் சிறப்பு பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு தேர்வு மையங்களில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

கணிதத் தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவிகள் சிலர் கூறுகையில், ஒரு மார்க் கேள்விகள் உள்பட அனைத்து வினாக்களுமே எளிதாக இருந்தன. பாடப் புத்தகத்தில் இருந்தே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதேநேரத்தில் விலங்கியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக சில மாணவிகள் கூறினர்.

பொறியியல் படிப்பில் கணிதத் தேர்வு மதிப்பெண்ணுக்கும், மருத்துவப் படிப்பில் விலங்கியல் தேர்வு மதிப்பெண்ணுக்கும் முக்கிய இடம் உண்டு. கணக்கு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கப்படும் பட்சத்தில் பொறி யியல் படிப்புக்கான ‘கட் ஆப் மார்க்’ இந்த ஆண்டு அதிகரிக் கக்கூடும். அதேபோல், விலங்கியல் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுக்கப்படும் சூழல் ஏற்பட்டால் மருத்துவ படிப்புக்கான ‘கட் ஆப் மார்க்’ குறையலாம்.

தவறான கேள்வி கேட்கப்பட்டதா? - கருணை மதிப்பெண் வழங்க மாணவர்கள் கோரிக்கை

பிளஸ் டூ கணிதத் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தவறாக இருப்பதால் அந்த கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் டூ கணிதத் தேர்வு நேற்று நடந்தது. இதில் 10 மார்க் வினா பகுதியில் (வினா எண் 58) கலப்பெண் கொடுக்கப்பட்டு அதற்கு மூல எண்கள் கண்டுபிடித்து பெருக்கல் பலன் 1 என காண்பிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அந்த வினாவில், புத்தகத்தில் உள்ளதைப் போன்று மைனஸ் குறியீடு இடுவதற்குப் பதிலாக பிளஸ் குறியீடு இடப்பட்டிருந்தது. இதனால், அந்த வினாவுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மைனஸ் குறியீட்டுக்குப் பதிலாக பிளஸ் குறியீடு இடப்பட்ட அந்த வினா தவறானது என்று புகார் தெரிவித்த மாணவர்கள், அதற்கு விடையளிக்க முயன்றிருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பிளஸ் டூ கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

தேர்வில் 10 மதிப்பெண் வினா பகுதியில் 14 கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் 9 வினாக்களுக்கு மட்டும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும். கேள்வித்தாள் கட்டமைப்பின்படி, 14 வினாக்களில் ஒரு வினாவை பாடத்திட்டத்துக்கு வெளியே கேட்பதற்கு கேள்வித்தாள் எடுத்தவர்களுக்கு உரிமை உண்டு. அந்த வகையில்கூட, குறிப்பிட்ட அந்த 58-வது வினாவை பாடத்திட்டத்தை விட்டு வெளியே இருந்து எடுக்கப்பட்ட வினாவாக கருத முடியும். இவ்வாறு அந்த ஆசிரியர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x