Published : 22 Mar 2015 02:40 PM
Last Updated : 22 Mar 2015 02:40 PM

சகாயத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்குக: விஜயகாந்த் கோரிக்கை

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்திலும் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்ய தூண்டபடுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் மரணத்தில் மர்மம். இதோடு கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் தற்கொலை போன்றவை அவர்கள் தங்களது பணியில் நேர்மையை பணியாற்ற விடாமல் பணத்தின் மீது கொண்ட பேராசையால் குறுக்கு வழியில் செல்வம் சேர்த்திட விரும்பும் கொள்ளை கும்பலோடு ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் என்று பொது மக்களும், பத்திரிக்கைளும் நம்புகிறார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

பணத்தின் மீதுள்ள பேராசையால் சில அரசியல்வாதிகள் குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதும், அதன் பலனாக பத்தாண்டுகள் பதினெட்டு ஆண்டுகள் என நீதிமன்றத்தின் நெடும்படி ஏறி செய்த குற்றத்துக்கு தண்டனை பெற்றிருக்கிறார்கள். சிலர் ஆட்சி அதிகாரத்தை இழந்திருக்கிறார்கள், இன்னும் சிலபேர் வாழ்நாள் முழுவதும் அரசியலை விட்டே ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். இருந்தும் இதுபோன்ற அக்கிரமங்களில் ஈடுபடுகிரவர்களை இந்த அரசாங்கம் சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காத்தாது ஏன்?

தற்போது, தமிழத்தில் நடைபெற்ற கனிமவள கொள்ளையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்களை உயர்நீதி மன்றம் நியமித்துள்ளது. அவருக்கும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்த வண்ணம் உள்ளன. இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. அவருக்கு மட்டுமல்ல இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு தேமுதிக என்றும் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும் என்று தெரிவித்து கொள்வதோடு, தமிழக அரசாங்கம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வந்த பின்பு அழுவதைவிட வரும்முன் காப்பது தான் புத்திசாலித்தனம். மீறி அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமேயானால் அதற்கு இந்த கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களும் இந்த அரசாங்கமும் தான்பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x