Published : 04 Mar 2015 07:07 PM
Last Updated : 04 Mar 2015 07:07 PM

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் குளறுபடி: சமூக நீதி அமைப்பினர் குற்றச்சாட்டு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் குளறுபடி நடைபெறுவதாக சமூக நீதிக்கான கூட்டமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன் உள்ளிட்ட சமூக நீதிக்கான கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

''நீதிபதிகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை.நீதிபதிகள் நியமனத்தில் இதுவரை வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை . உயர் சமுதாயத்தினருக்கு ஆதரவாகவே பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது .

எனவே, ஏற்கெனவே பரிந்துரைத்த பட்டியலை திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் அனைத்து சமுதாயத்தினரும் அடங்கிய புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும்.

18 நீதிபதிகளை நிரப்ப வேண்டும் என்ற சூழலில் 9 நீதிபதிகளுக்கான பட்டியலை அனுப்புவதற்கான காரணம் கூட, அதில் மூன்றில் ஒரு பங்கை பதவி உயர்வின் வழியாக அளிக்க வேண்டும். அப்படி அளிக்கிற போது மூன்று பேர் மட்டும்தான் பதவி உயர்வு பெறுவார்கள். ஆனால், நான்கு பேருக்கு கொடுத்தால் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வரமுடியும் என்ற நிலையில், 9 நீதிபதிகளைக் குறைத்துக்கொண்டு அவர்கள் வாய்ப்பை தடுக்கிறார்கள்.

அடுத்த பட்டியலை அனுப்புவதற்குள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவரின் பதவிக்காலம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சமூக நீதி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய பட்டியலின்படி நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x