Published : 19 Mar 2015 10:11 AM
Last Updated : 19 Mar 2015 10:11 AM

திருப்பூர் அருகே வெள்ளலூரில் பழமையான ரோமானிய நாணயங்கள் கண்டுபிடிப்பு

திருப்பூர் அருகே வெள்ளலூரில் பழமையான ரோமானிய நாண யங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை முசிறியில் இருந்து எகிப்துக்கு அன்றைய காலகட்டத்தில் நடந்த கடல் வழி வணிகத்தை உறுதி செய்கின்றன.

திருப்பூரைச் சேர்ந்த வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத் தின் ஆய்வாளர்கள் வெள்ளலூர் கிராமத்தில் 6 ரோமானிய நாணயங் களைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கொங்கு நாட்டு வரலாற்றில் பாலக்காட்டு கணவாய் முக்கிய இடம் வகிக் கிறது. இந்தக் கணவாயில் இருந்து செல்லும் கொங்கு பெருவழி மதுக்கரை, வெள்ளலூர், சூலூர், காங்கேயம், கருவூர், குளித்தலை, உறையூர் வழியாக பூம்புகார் சென்றடைகிறது. இந்த பெருவழியில்தான் பரவலாக ரோமானிய நாணயங்கள், அணி கலன்கள் கிடைக்கின்றன.

அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள 6 ரோமானிய நாணயங்கள் முசிறிக்கும் எகிப்து நாட்டுக்கும் இருந்த வணிக ஒப்பந்தங்களை உறுதி செய் கின்றன. ஆஸ்திரியா தலைநகர் வியன்னா அருங்காட்சியகத்தில் பழங்காலத்து ஒப்பந்தம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் நகல் கரூர் அருங்காட்சியகத்திலும் உண்டு.

சேர நாட்டில் பேரியாற்று (இன்றைய பெரியார் ஆறு) முகத்துவாரத்தில் இருந்த முசிறி (கொடுங்கலூர் அருகே இருக்கும் இன்றைய பட்டணம்) நகர வணி கருக்கும் எகிப்து நாட்டின் நைல் நதியின் முகத்துவார கிரேக்க வணிகருக்கும் போடப்பட்ட வணிக ஒப்பந்தம் அது. கிரேக்க மொழியில் இரு பக்கங்களில் எழுதப்பட்ட அதில் தமிழ் வணிகர் கையெழுத்திட்டுள்ளார்.

ஒப்பந்தத்தின்படி பேரியாறு வழியாக முசிறி துறைமுகத்தில் இருந்து மரக்கலங்களில் சரக்கு பொதிகள் ஏற்றப்பட்டு அவை செங்கடலின் மயோஸ் கார்மோஸ் (Myos Harmos) என்கிற துறைமுகத் துக்கு சென்றன. அங்கே இருந்து கழுதைகள் மூலம் சரக்குகள் கிழக்கு சகாரா பாலைவனத்தை கடந்து நைல் நதிக் கரையில் இருந்த பண்டைய காப்போடோஸ் (Copotos) நகரை அடைந்தன. அங்கிருந்து நைல் நதி வழியாக அலெக்சாண்டாரியா நகரை அடைந்தன. அந்தப் பொதிகளின் மதிப்பு அலெக்சாண்டாரியாவின் ஒரு நீர்வழிச் சாலையை அமைக்க போதுமானது என்கிறது ஒப்பந்தக் குறிப்பு. அநேகமாக, அவை மிளகு மற்றும் வாசனை பொருட்களாக இருக்காலம். தற்போது கிடைத்துள்ள 6 நாண யங்களும் அந்தக் காலத்தில் பல்வேறு ரோமானிய பேரரசர்கள் வெளியிட்ட நாணயங்களாகும்” என்றார்.

இதுகுறித்து தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றனார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பாலக்காட்டுக் கணவாயின் பல்வேறு ஊர்களில் வாழ்ந்த இனக் குழுவினர் வாணிபத்தில் சிறந்து விளங்கினர். வேளிர்கள் எனப்படும் அவர்கள் இங்கு ஆட்சி செய்ததால் வேள்+இல்+ஊர் என் பது வேளிலூர் என்றாகி அது வெள்ளலூர் ஆக மாறியது. வாணிகத்தில் மேற்கை யும் - கிழக்கையும் இணைத்த அலெக்ஸாண்டிரியாவை ஜூலி யஸ் சீசர் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்த பின் கொங்கு நாட்டுப் பெருவழிகளில் கிரேக்கர்கள் பய ணம் செய்தனர். இதுவரை இங்கு 1500 ரோமானியக் காசுகள் நமக்கு கிடைத்துள்ளன. இவை கிரேக்கர்களுடன் கி.மு. 2-ம் நூற் றாண்டு முதல் கி.பி. 6-ம் நூற் றாண்டு வரை இருந்த வணிக தொடர் புகளை நிருபிக்கின்றன” என்றார்.

1.166 கிராம் எடை கொண்ட நாணயம்

தற்போது கிடைத்துள்ள வெள்ளியிலான ஒரு நாணயம் கி.மு. 82-ல் ரோம் பேரரசர் லுசியல் கார்னிலியஸ் சுல்லா வெளியிட்டது. 1.166 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கம் செங்கதிர் கடவுளான ஜூபிடர் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவது போலவும், மறுபக்கம் கவிதை, இசை கடவுளான அப்பல்லோ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சால்வசிரே பெலிக்கன் குடியரசின் மன்னர்கள் தியோடோசியஸ், தியோடோசியஸ் 1, வேலண்ட்டியன்2, ஆர்க்கேடியஸ், ஹானரோயஸ் ஆகியோர் வெளியிட்ட மூன்று நாணயங்கள் செம்பினால் ஆனவை. இவை கி.பி. 395 முதல் 402-ம் காலகட்டத்தை சேர்ந்தவை. இவை தவிர தியோடோசியஸ் 2-ம் மன்னர் கி.பி. 402 முதல் 450 வரையிலான காலகட்டத்தில் வெளியிட்ட 1.020 கிராம் கொண்ட செம்பு நாணயத்தில் சிங்கம் பதுங்கிப் பாயும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கானிஸ்டண்டியஸ் 2-ம் மன்னர் கி.பி.324 முதல் 337 வரையிலான காலகட்டத்தில் வெளியிட்ட மற்றொரு செம்பு நாணயம் 1.41 கிராம் எடை கொண்டது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x