Published : 09 Mar 2015 02:36 PM
Last Updated : 09 Mar 2015 02:36 PM

மோடி இலங்கை பயணிக்கும் நேரத்தில் முகத்தில் அடிப்பது போல் பேசுவதா?- ரணிலுக்கு கருணாநிதி கண்டனம்

பிரதமர் மோடி தனது பயணத்தை இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இலங்கைத் தமிழர் நலனுக்காக பேச வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், "இந்தியப் பிரதமர் மோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கை செல்லப்போகின்ற நேரத்தில், முகத்திலே அடிப்பதைப் போல இலங்கைப் பிரதமர் பேட்டி கொடுத்திருப்பது சரியல்ல. கண்டனத்துக்குரிய ஒன்று" என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி துயரத்தைத் தருவதாக உள்ளது. மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை சுடுவது நியாயமா என்ற கேள்விக்கு, இலங்கைப் பிரதமர் அளித்த பதில், "கடற்படை சில சமயங்களில் அப்பாவி மீனவர்களையும் சுட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

எங்கள் கடல் பகுதிக்குள் நீங்கள் ஏன் வருகிறீர்கள்? ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால் நான் அவரைச் சுடலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது" என்று பதிலளித்திருக்கிறார். வலை வீசும் தமிழக மீனவர்களுக்கு கடல் எல்லை என்ன என்று தெரிவது சற்று சிரமமான விஷயம்.

மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கையின் எல்லை இங்கிருந்து தான் என்று அறிவதற்கு எந்தவிதமான தடயங்களோ, அடையாளங்களோ இல்லாத நிலையில் அப்பாவித்தனமாக மீன்களைப் பிடிக்கும்போது இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கி கைது செய்கின்ற துயரமான நிலை தொடர்ந்து நடந்து வந்து கொண்டே இருக்கிறது. மீனவர்கள் தங்கள் வாழ்வினைத் தொடர மீன் பிடிக்க வருவதை, இலங்கைப் பிரதமர் அவரது வீட்டில் கொள்ளை அடிக்க முயலுவதாக ஒப்பிட்டிருப்பது எப்படி சரியாகும்? கடலிலே மீன் பிடித்தால் அதற்காக சுடலாம் என்பது தான் நீதியா? சட்டம் அதை அனுமதிக்கிறதா?

அதைப் போல கச்சத் தீவு பற்றிய கேள்விக்கும் இலங்கை பிரதமர் "கச்சத் தீவை நாங்கள் விட்டுத் தரப் போவதுமில்லை, ஒப்பந்தத்தில் கொடுக்கப் போவதுமில்லை" என்று திட்டவட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நல்லெண்ணப் பயணமாக இலங்கை செல்லப் போகின்ற நேரத்தில் இலங்கைப் பிரதமர் இவ்வாறு முகத்திலே அடிப்பதைப் போல பேட்டி கொடுத்திருப்பது சரியல்ல. கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.

நமது வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இலங்கைக்குச் சென்றிருக்கின்ற இந்த நேரத்தில் அதைத் திசை திருப்புகின்ற வகையில் ரணில் பேட்டி பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு உதவாமல் மேலும் சிக்கலைத் தான் உருவாக்கும். பிரதமர் மோடியும் இலங்கைக்குச் செல்கின்ற இந்த வேளையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகளுக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில், முடிவாகக் கருத்துச் சொல்வதைப் போன்று ரணில் செயல்பட்டிருப்பது கவலையைத் தருகின்றது.

இலங்கைப் பிரதமரின் பேட்டிக்குப் பிறகு இலங்கைப் பிரதமரைச் சந்தித்த நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கைப் பிரதமரின் பேட்டியை நிராகரித்ததோடு, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதற்குப் பதிலாக மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டுமென்று கூறியிருப்பது ஆறுதலாக உள்ளது.

மேலும் இலங்கையிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்திய அமைச்சரை நேரில் சந்தித்து, "இலங்கைக்குள் புலம் பெயர்ந்த தமிழர் களையும், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களையும் மீண்டும் அவரவர் சொந்த இடங்களில் குடி அமர்த்தவேண்டும். சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்களை மீட்க வேண்டும். இலங்கை அரசு சில இடங்களை விட்டுக் கொடுப்பதாக சமீபத்தில் அறிவித்தது. ஆனால் இதுவரை ஒரு துண்டு நிலத்தைக் கூட தமிழர்களுக்கு கொடுக்கவில்லை" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலனுக்காகவும் தமது பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் 13வது சட்டத் திருத்தத்தைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவது, தமிழருடைய நிலங்களை சிங்களரிடமிருந்து பெற்று நில உரிமையாளர்களிடம் வழங்குவது, மாகாணக் கவுன்சிலுக்கு காவல் துறை நில நிர்வாகம், நில வருவாய், மீன்பிடி தொழில் சம்மந்தமான அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றுத் தருகின்ற வகையில் மோடி அங்கே கருத்துகளைக் கூற வேண்டும்.

தமிழர்களையும் அங்கிருந்த போராளிகளையும் ரணில் குற்றச்சாட்டியுள்ளார். ஆனால், இதே போராளிகளைச் சந்தித்துத் தான் ரணில் விக்ரமசிங்கே தேர்தலில் போட்டியிட்டார், வெற்றியும் பெற்றார். அப்போது அவர் கொடுத்த உறுதிமொழி, தமிழர் பகுதிகளிலே உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவோம், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றெல்லாம் கூறி தமிழர்களின் ஆதரவைப் பெற்று இலங்கை பிரதமரானார். ஆனால் பொறுப்புக்கு வந்தவுடன் தான் கொடுத்த உறுதிமொழியை, தமிழர்களுடைய பிரச்சினையில் நிறைவேற்றவில்லை. இப்படி உண்மை இருக்கும்போது, தமிழர்களையும், போராளிக் குழுக்களையும் குறை சொல்வதில் சற்றும் நியாயம் கிடையாது.

கடந்த மாதம் மைத்ரி சிறிசேனா இந்தியா வருகை தந்த போது, ஈழத்தில் வாழும் தமிழர்கள் பிரச்சினைகள் பற்றி அவர்களிடம் பேச வேண்டு மென்று நம்முடைய பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். திரும்பவும் நான் நம்முடைய பிரதமரிடம் சொல்லிக் கொள்வது என்னவென்றால், இலங்கைக்குச் செல்ல விருக்கிறீர்கள்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை, மாகாண கவுன்சில் அதிகாரங்கள், தமிழர் பகுதிகளிலே இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறுதல், தமிழர்களுடைய நிலங்களை சிங்களவர்களிடமிருந்து கையகப்படுத்தி திரும்பவும் தமிழர்களுக்கு வழங்குதல் போன்ற பிரச்சினைகளை இலங்கை பாராளுமன்றத்தில் அவர் பேசும் போதும், இலங்கை அதிபருடன் பேசும்போதும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பற்றியும், தமிழக மீனவர்களின் எதிர்காலம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

இந்தியாவின் நட்பினை இலங்கை அதிபர் மிகவும் விரும்புவதால், இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கான உரிமைகளை மோடி அவர்கள் இந்த நேரத்தில் பெற்றுத் தர முடியும். இது தான் உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதனை நமது பிரதமர் அவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x