Published : 22 Mar 2015 04:46 PM
Last Updated : 22 Mar 2015 04:46 PM

நிலச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: அண்ணா ஹசாரேவுக்கு கருணாநிதி கடிதம்

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "மக்களவையில் 10.3.2015 அன்று நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதா குறித்து தாங்கள் எழுதிய 14.3.2015 தேதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இந்த மசோதாவை எதிர்த்துப் போராடி மத்திய அரசு விவசாயிகள் பற்றி சிந்திக்கத் தொடங்க நிர்ப்பந்திக்குமாறு தாங்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளீர்கள்.

உங்களது கடிதத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக கவனிக்கத் தேவையுள்ள இந்த மசோதா தொடர்பான ஆறு முக்கியமான பிரச்சனைகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

1. சுதந்திரம் பெற்றதிலிருந்து, நில அளவை (நில சர்வே, நில வரைபடம் தயாரிப்பு) செய்யப்படவேயில்லை. நிலங்கள் 1/2/3/4/5/6 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன இதில் 1/2/3 ஆகியவை தொழில் பயன்பாட்டுக்கு அளிக்கப்படக்கூடாத வளமான நிலத்தைக் குறிபிடுகின்றன. இதைத் தடுக்கும் ஒரு சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவை உள்ளது.

2. நாடாளுமன்றம் நிறைவேற்றிய 2013-ம் ஆண்டு சட்டத்தில் தனியார் திட்டங்களுக்கு நிலங்களை மாற்ற 80% விவசாயிகளின் ஒப்புதல் அவசியம் என்ற பிரிவு இருந்தது; பொதுத்துறை தனியார் துறை கூட்டுத் திட்டங்களுக்கு 70% பேஎரின் ஒப்புதல் கட்டாயமாகும். அரசு இந்தப் பிரிவை அகற்றிவிட்டது, விவசாயிகளின் ஒப்புதல் தேவையே இல்லை. இது விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது; எனவே 2013ஆம் ஆண்டு சட்டத்தின் இந்தப் பிரிவு அமலில் இருக்கவேண்டும்.

3. அப்படியே இருக்க வேண்டிய 2013-ம் ஆண்டு சட்டத்தின் மற்றொரு பிரிவு சமுகத் தாக்கத்தின் கணிப்பு ஆகும்; இதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

4. 2013-ம் ஆண்டு சட்டத்தின்படி, கையகப்படுத்தப்பட்ட தேவைக்காக நிலம் ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அது விவசாயிகளுக்குத் திருப்பித் தரப்படவேண்டும். இப்பொது இந்தப் பிரிவும் அகற்றப்பட்டுள்ளது, இது மிகவும் ஆட்சேபணைக்குரியதாகும்.

5. 2013ஆம் ஆண்டு சட்டத்தில், தேச நலன் கருதி சில விலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன; தற்போது இந்த விலக்குகள் 'தனியார் மருத்துவ மனைகள்' தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தனியார் மருத்துவமனைகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் பொது மக்களிடமிருந்து பணத்தை அபகரிக்கின்றன, இதை எந்த விதத்திலும் தேசிய நலன் என்று கருத முடியாது.

6. மக்கள் தொகையின் பெருகிவரும் தேவைகளை சமாளிக்க நமது முதன்மையான தேசிய முக்கியத்துவம் விவசாயத்தில் உற்பத்தியைப் பெருக்குவதாகும். இதற்கேற்ப, 2013 ஆம் ஆண்டு சட்டத்தில், விவசாய உற்பத்திக்கு தகுதியான நிலத்தின் பயன்பாட்டை மாற்ற அனுமதி மறுக்கப்படுகிறது; இரண்டு, மூன்று போக விவசாய நிலங்களை விவசாயம் தவிர வேறெந்த பணிக்கும் கருதக்கூடாது என்று பிரிவுகள் இருந்தன. இந்தப் பிரிவும் கூட நீக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது. போதுமான பாசன நீர் கிடைத்து உற்பத்தி செய்யப்பட்டுவரும் வளமான நிலங்களும் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தானிய உறபத்தி வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. இது முற்றிலும் தேச நலனுக்கு எதிரானது."

நீங்கள் சரியாக வருணித்தபடி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உண்மையிலேயே கொடூரமானதாகும். இந்த மசோதாவின் விவசாயிகள் விரோதப் பிரிவுகளை ஆரம்பம் முதலே நாங்கள் எதிர்த்து வருகிறோம்.

சொல்லப்போனால், இந்த மசோதவை எதிர்த்து தி.மு.க 20.3.2015 அன்று தமிழ்நாடின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளது. நானே சென்னையில் நேற்று பிரம்மாண்டமான் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றேன். இந்த மசோதாவுக்கு எங்களது கடுமையான எதிர்ப்பு இறுதிவரை இருக்கும்.

நீங்கள் அமைதிபூர்வமாக போராடிவரும் சமூகப் பிரச்சனைகளை தி.மு.க எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. தேசத்தின் பெரும் நலன் கருதி இத்தகைய போராட்டங்களில் நாங்கள் உங்களுடன் இருப்போம்" என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x