Published : 27 Mar 2015 05:55 PM
Last Updated : 27 Mar 2015 05:55 PM

முதல் முறையாக ஜல்லிக்கட்டு காளை கண்காட்சி: புலிக்குளம் காளைகளை அழிவிலிருந்து காக்க வலியுறுத்தல்

தென்மாவட்டங்களில் ஆயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க புலிக் குளம் ஜல்லிக்கட்டு காளைகள், பசுக்கள் கண்காட்சி நேற்று தமிழகத்திலே முதல்முறையாக திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இந்தியாவில் 35 வரையறுக்கப்பட்ட நாட்டின மாடுகள் உள்ளன. இதில் உம்பளாச்சேரி, காங்கேயம், புலிக்குளம், பர்கூர் காளைகள் உள்ளிட்ட தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் 5 பழம்பெரும் மாட்டினங்கள் உள்ளன. தென்மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் மேல் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் புலிக்குளம் காளைகள்தான் பயன் படுத்தப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கே உரித்தான சிறிய, திடமான உடலமைப்பு, குட்டையான, வலிமையான திமில், கூர்மையான கொம்புகள் அமைந்துள்ளது புலிக்குளம் காளைகள் தனிச் சிறப்பு. இவற்றை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக் காகவே வளர்க்கின்றனர். ஜல்லிக் கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் இந்த புலிக்குளம் ஜல்லிக்கட்டு காளைகளை விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாமல் காளை வளர்ப்போர் அடிமாட்டுக்காக கேரளத்துக்கு விற்கின்றனர்.

இந்நிலையில் கூடுதல் பால் கொடுக்கும் ஹைபிரீட் பசுமாடு களின் வருகையால் புலிக்குளம் இன பசு மாடுகள் வளர்ப்பும் தற்போது குறைந்துவிட்டது. அதனால், ஆயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க இந்த புலிக்குளம் மாடுகள் அழிந்துவருவதால், இந்த இன காளைகள், பசுக்களை காப்பாற்றவும், பொதுமக்களிடம் இந்த இன மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கவும் நேற்று தமிழகத் தில் முதல்முறையாக திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் புலிக்குளம் ஜல்லிக்கட்டு காளைகள், பசுக்கள் கண்காட்சி நடைபெற்றது.

தென் மாவட்டங்களை சேர்ந்த மாடு வளர்ப்போர், தங்கள் புலிக் குளம் ஜல்லிக்கட்டு காளை, பசுக் களை கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். கால்நடை பராமரித் துறை சார்பில் சிறந்த புலிக்குளம் காளைகள், பசுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை கால் நடை பல்கலை. மரபியல் பேராசிரியர் திலக் பொன் ஜவகர் `தி இந்து'விடம் கூறியது: இந்த மாட்டினத்தின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் புலிக்குளம் என்ற இடம். அதனால், இவை புலிக்குளம் காளைகள் என பெயர் பெற்றன. தற்போது தமிழகத்தில் வெறும், 21,000 மாடுகள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வகை மாடுகள் கருஞ்சாம் பல் நிறத்திலும், பசுக்கள் சாம்பல் நிறத்துடனும் காணப்படுகின்றன. இந்த மாடுகள் 20 ஆண்டுவரை உயிர்வாழ்கின்றன. 2 ஆண்டில் இந்த புலிக்குளம் காளைகளை, மாடு வளர்ப்போர் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்கின்றனர்.

காளைகள் சராசரியாக 300 கிலோ எடை, பசுக்கள் 250 கிலோ எடை கொண்டவையாகவும் இருக்கும். புலிக்குளம் இன பசும்பால், ஜீரண சக்தி கொண்டவை. மூட்டுவலி, உடல்வலியை போக்கும் மருத்துவ குணம் கொண்டவை. இந்த காளைகள், பசுக்கள், மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளை தாங்கி வளரக்கூடியவை. ஆனால், இவற்றை கால்நடை வளர்ப்போர் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே வளர்ப்பதால் இந்த இன மாடுகள் அழிகின்றன என்றார்.

அடிமாடுக்கு செல்லும் காளைகள்

திண்டுக்கல் தவசிமடையை சேர்ந்த புலிக்குளம் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் மகேந்திரன் கூறியது: புலிக்குளம் காளைகள் விவசாயத்துக்கு உதவாது. உழவு வண்டியில் மாட்டினால் நேராக உழவாது. ஜல்லிக்கட்டுக்காக வளர்ப்பதால் ஒற்றை கயிற்றை கட்டி வளர்க்க முடியாது. சொன்னபடி கேட்காது. அதனால், மாட்டுவண்டிகளில் மாட்ட முடியாது.

ஜல்லிக்கட்டு விளையாட்டு நிறுத்தப்பட்டதால் பராமரிக்க முடியாமல் தவசிமடை, வெள்ளோடு, உள்ளிட்ட பகுதியில் 50 சதவீதம் புலிக்குளம் ஜல்லிக்கட்டு காளைகள் அடிமாட்டுக்கு கேரளத்துக்கு விற்கப்பட்டுள்ளன. மீதி பேரும் விற்கும் நிலையில்தான் உள்ளனர். அதனால், இந்த காளைகளை அழிவிலிருந்து காப்பாற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x