Last Updated : 26 Mar, 2015 10:51 AM

 

Published : 26 Mar 2015 10:51 AM
Last Updated : 26 Mar 2015 10:51 AM

மாறுபடும் பாலின விகிதம்: தமிழகத்தில் கருவுற்றோர் பதிவை கட்டாயமாக்குவது அவசியம் - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

இயல்பான பாலின விகிதம் என்பது 1,000 ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்களும் இருப்பதுதான். ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆண்- பெண் விகிதம் முறையே 1,000-க்கு 943 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது. ஹரியாணா மாநிலத்தில் மேலும் குறைந்து 877 பெண்களே உள்ளனர்.

இதையடுத்து, பாலின விகிதத்தை சமமாக கொண்டு வரவும், கருவிலேயே பெண் சிசு அழிக்கப் படுவதைத் தடுக்கவும், புதிய சட்டம் கொண்டு வர ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெண் கருவுற்ற 3 மாதங்களுக்குள், அந்த விவரத்தை அரசிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், கருவுற்ற பெண்ணின் பெற்றோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் ஆண், பெண் விகிதம் 1000-க்கு 996 என்ற அளவில் உள்ளது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பைவிட 2011-ல் கொஞ்சம் சீரடைந்திருந்தா லும், 0 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கான விகிதத்தைப் பொருத்த வரையில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகளே உள்ளனர். குறிப்பாக அரியலூர், கடலூர் மாவட் டங்களில் (ஆயிரத்துக்கு) 900-க்கும் குறைவாகவே பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழகத்திலும் பாலின விகிதம் சமமாக இல்லை என்பதால் இங்கும் சட்டம் இயற்ற வேண்டியது அவசியமா என்று பல தரப்பினரிடம் கேட்டோம்.

உசிலம்பட்டி வட்டாரத்தில் பெண் சிசுக் கொலை உச்ச கட்டத்தில் (1987) இருந்தபோது, அதைத் தடுக்க ஜெர்மன் பாதிரியாரால் தொடங் கப்பட்ட கிளரீசியன் கருணை இல்லத் தின் இன்றைய நிர்வாகி பாதிரியார் மகிழ்ச்சி மன்னன் கூறியதாவது:

தமிழகத்தில் பெண் சிசுக் கொலை என்பது ஒழிந்துவிட்டாலும், கருவிலேயே பெண் சிசுவை அழித்தொழிக்கும் கொடூரம் அதிகரித் துள்ளது. எனவே, அந்தச் சட்டம் தமிழகத்துக்கும் அவசியம் என்றார்.

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவி நிர்மலா கூறியதாவது:

தமிழகத்தில் இந்தச் சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது எனலாம். ஒரு பெண் கருத்தரித்தால், அந்த விவரம் உடனடியாக அந்தப் பகுதி கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

கருவுற்ற பெண்கள் விவரம் குறித்து செவிலியர்கள் பதிவு செய்ததற்கும், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இடையில், கரு எப்போது, எப்படி அழிந்துபோனது என்பது குறித்து அரசிடம் எந்த ஆவணமும் இல்லை. பெண் கருவுற்றிருப்பது 45-வது நாளிலேயே தெரிந்துவிடும். அப்போதே குழந்தை தேவையா, இல்லையா என்று முடிவு செய்வதில் தவறில்லை. ஆனால், பாலின அடையாளம் தெரிய ஆரம்பித்த 3-வது மாதத்துக்குப் பிறகு கரு கலைக்கப்பட்டால், அதை பெண் சிசுக் கொலையாகவே கருத வேண்டியுள்ளது.

கருவின் தன்மையைக் கண் டறியும் தொழில்முறைகள் சட்டம், 1996 முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதன்படி, தவறிழைக்கும் ஸ்கேன் மையத்தின் உரிமத்தை ரத்து செய்யவும், தவறு செய்த மருத்துவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கவும் இடமுள்ளது.

இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தினாலே பெண் கருக் கொலையைத் தடுக்க முடியும். புதிய சட்டத்துக்கு அவசியமே இல்லை என்றார் நிர்மலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x