Last Updated : 24 Mar, 2015 10:48 AM

 

Published : 24 Mar 2015 10:48 AM
Last Updated : 24 Mar 2015 10:48 AM

வாட்ஸ்-அப் மோக காலத்தில் தெருக்கூத்து! - பெரியார் பல்கலை. மாணவர்கள் புது முயற்சி

வாட்ஸ்-அப், முகநூல் என்று இணைய மோகத்தில் இளம் பட்டாளங்கள் வளைய வரும் இந்தக் காலத்தில், தெருக்கூத்து மூலம் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு கருத்துகளை கொண்டு சேர்க்கும் அரிய முயற்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மாணவ- மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் மக்களை வசப் படுத்தி, தற்போது விழாக் காலங் களில் மட்டுமே காணக் கிடைக்கும் கலையாகிவிட்டது தெருக்கூத்து. காலமாற்றத்தில் வீதி நாடகமாக தெருக்கூத்து உருமாறிவிட்டது.

டெல்லியில் 1989, ஜன. 2-ல் தனியார் நிறுவன முதலாளியை எதிர்த்து, வீதி நாடகம் போட்டு, ‘உரக்க பேசு’ என்ற தலைப்பில் கோரிக்கை முழக்கமிட்டார் சப்தார் ஹாஸ்மி. இதனால் அவர் படு கொலை செய்யப்பட்டார்.

அன்றைய பிரதமர் வி.பி.சிங் நேரில் சென்று, சப்தார்ஹாஸ்மி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவத்தையடுத்து, தெருக்கூத்து கலை நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத் தியது.

அரசியல் கட்சியினரும் வீதிநாடகம் மூலம் கட்சி வளர்ப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது, அழிவின் விழிம்புக்கே சென்றுவிட்ட தெருக்கூத்துக் கலையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், புரசை பகுதியைச் சேர்ந்த தெருக் கூத்து கலைஞர் தம்பரானின் வழிதோன் றல்கள் மூலம் தெருக்கூத்து கலை மெதுவாய் வளர்ந்து வருகிறது என்று கூறலாம்.

அதேபோல, ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலும், மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காகவும் அரசுகளும் தெருக்கூத்து கலையைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை மீட்டெடுத்து, மக்களிடையே நல்ல பல விழிப் புணர்வு கருத்துகளை கொண்டு சேர்க்கும் அரிய முயற்சியை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக, பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆங்கிலத் துறை மாணவ- மாணவிகள் 60 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு மதுரையைச் சேர்ந்த சத்தியமாணிக்கம், பால்பாண்டி ஆகியோர் மூலம் தெருக்கூத்து கலைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப், முகநூல் என்று இணைய மோகத்தில் இளைஞர்கள் மூழ்கிக் கிடக்கும் இக்காலத்தில், நமது பாரம்பரிய கலையை வளர்க்க கல்வி நிறுவனங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நல்ல களமாக விளங்க, பெரியார் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக திகழ்கிறது.

இதன்மூலம், மற்ற கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங் களும் மாணவ- மாணவிகளுக்கு தெருக்கூத்து பயிற்சி அளிப்பதன் மூலம், பாரம்பரியமிக்க இந்தக் கலை அழிவின் பிடியில் இருந்து மீளும் என்கின்றனர் தெருக்கூத்து கலைஞர்கள்.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் சங்கீதா கூறியது:

‘‘கிராமங்கள்தோறும் சென்று பெண் கல்வி, இளவயது திருமணம், சிசு கொலை தடுப்பு, பாலின வன் கொடுமை ஒழிப்பு என பல நல்ல கருத்துகளை தெருக்கூத்து வாயிலாக பரப்ப உள்ளோம்.

தெருக்கூத்துக்கு மக்கள் அளிக்கும் ஆர்வத்தின் மூலம் பல மாவட்டங்களுக்கும், எங்க ளது மாணவ- மாணவிகள் சென்று, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடுவார்கள்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை மையம் வீதிநாடக இயக் குநர் சத்தியமாணிக்கம் கூறியது:

‘‘கல்விக் கூடங்களில் வீதிநாடக கலையை மாணவ- மாணவிகள் கற்கும் வகையில் பாடத்திட்டம் கொண்டு வந்தால் தெருக்கூத்து கலைக்கு வழி பிறக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x