Published : 02 Mar 2015 08:52 AM
Last Updated : 02 Mar 2015 08:52 AM

இந்திய கம்யூ. மாநில செயலாளர் பதவிக்கு ஆதரவு இருந்தும் சி.மகேந்திரன் வரமுடியாமல் போனது ஏன்?- வெளிவராத பின்னணி தகவல்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தேர்தலில் கடைசி நேரத்தில் தா.பாண்டியன் தரப்பு விதித்த நிபந்தனையால் சி.மகேந்திரனுக்கு மாநிலச் செயலாளராகும் வாய்ப்பு தவறிப்போனதாக சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பதவியை தக்க வைத்திருந்த தா.பாண்டியன் இம்முறையும் செயலாளராக முயற்சித்தார். ஆனால், அவரது செயல்பாடுகளை வெளிப்படையாக சந்தேகித்த நிர்வாகிகள் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்சியில் கட்சிக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்ற விவகாரம், சென்னையில் கட்சி அலுவலகம் கட்டியதற்கான வரவு செலவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து தா.பா-வை மையப்படுத்தி சர்ச்சைகள் கிளப்பப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது.

விசாரணை தொடர்பாக நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமானால் அவர் செயலாளர் பதவியில் தொடரக் கூடாது என ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கினர். அவருக்குப் பதிலாக சி.மகேந்திரனை செயலாளராக்கி முந்தைய நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என அவர்கள் விரும்பினர்.

ஆனால், சி.மகேந்திரன் மாநிலச் செயலாளராக வருவதற்கு போதிய ஆதரவு இருந்தும் கடைசி நேரத்தில் தா.பா. தரப்பு வைத்த நிபந்தனையால் அவர் மாநிலச் செயலாளராக முடியாமல் போனதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அந்த நிர்வாகிகள் கூறியதாவது: கட்சியின் கவுன்சில் உறுப்பினர்களும் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டுத்தான் மாநிலச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும். மாநாட்டுக்கு வந்திருந்த கட்சி பிரதிநிதிகள் மூலம் 125 கவுன்சில் உறுப்பினர்களும் 6 கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தான் மீண்டும் மாநிலச் செயலாளராக வரமுடியாது என்பது தா.பா-வுக்கு தெரியும். அதனால் தனக்குப் பதிலாக இரா.முத்தரசனை செயலாளராக்க அவர் முடிவெடுத்தார். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தானும் போட்டியிடப் போவதாகச் சொன்னார். ‘அவர் போட்டியிடாமல் இருக்க வேண்டுமானால் இப்போதுள்ள கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ஆறு பேர் உட்பட நாங்கள் குறிப்பிடும் 12 நபர்களை கவுன்சிலுக்கோ கட்டுப்பாட்டுக் குழுவுக்கோ தேர்வு செய்யக் கூடாது’ என்று தா.பாண்டியன் தரப்பினர் நிபந்தனை வைத்தனர்.

கட்டுப்பாட்டுக் குழுதான் தா.பா. மீது சொல்லப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. ஆக, மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடிய 12 பேரை மாநிலக் குழுவுக்கு வரவிடாமல் முன்கூட்டியே தவிர்த்து விட்டனர். வாக்கெடுப்பில்

முத்தரசனுக்கு 63 ஓட்டுகளும் மகேந்திரனுக்கு 61 ஓட்டுகளும் கிடைத்தன. இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார் மகேந்திரன்.

மாநாட்டுக்கு வராதவர்களையும் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யலாம் என்ற கட்சியின் துணை விதியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மாநாட்டுக்கு வராத சிலரையும் கவுன்சில் உறுப்பினர்களாக ஆக்கினார்கள். எப்படியாவது தா.பாண்டியனை மீண்டும் பதவிக்கு வரவிடாமல் தடுத்தால் போதும் என்பதால் அவர் தரப்பு விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். இவ்வாறு அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அப்படியானால் இனி மகேந்திரனின் நிலை என்ன? தா.பாண்டியனால் பதவிக்கு வந்த முத்தரசனின் நடவடிக்கைகள் சுதந்திரமாக இருக்குமா என்று அவர்களைக் கேட்டபோது, “மகேந்திரன் இப்போதுள்ள மாநில துணைச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார். நல்லகண்ணுவும் தா.பாண்டியனும் இப்போது தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குப் பதிலாக முத்தரசனும் மகேந்திரனும் நியமிக்கப்படலாம். தா.பாண்டியன் ஆதரவில் பதவிக்கு வந்திருந்தாலும் முத்தரசனால் எதையும் மூடி மறைக்க முடியாது’’ என்று அவர்கள் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x