Published : 23 May 2014 10:00 AM
Last Updated : 23 May 2014 10:00 AM

ஆம் ஆத்மியில் புஷ்பராயனுக்கு புதிய பொறுப்பு?- அதிக வாக்குகள் வாங்கியதால் வாய்ப்பு

தூத்துக்குடி ஆம் ஆத்மி வேட்பாளர் ம. புஷ்பராயன், அக்கட்சி வேட்பாளர் களில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். எனவே, அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

24 பேர் போட்டி

தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் 24 பேர் போட்டியிட்டனர். இருப்பினும், அனைவரின் பார்வையும் 3 பேர் மீதுதான் இருந்தது. காரணம், அந்த மூவரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் மூலம் தேர்தல் களம் வந்தவர்கள்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் கன்னியாகுமரியிலும், போராட்டக் குழுவை சேர்ந்த ம.புஷ்பராயன் தூத்துக்குடியிலும், மை.பா. ஜேசுராஜ் திருநெல்வேலி யிலும் போட்டியிட்டனர். இவர்கள் கணிசமான வாக்குகள் பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூவருமே டெபாசிட் இழந்தனர். உதயகுமாருக்கு 15,314 வாக்குகளும், மை.பா. ஜேசுராஜூக்கு 18,290 வாக்குகளும், புஷ்பராயனுக்கு 26,476 வாக்குகளும் கிடைத்தன.

உதயகுமாரை கைவிட்ட மீனவர்கள்

மூவரும் கடற்கரை கிராம மீனவர் வாக்குகளை குறி வைத்தே களம் இறங்கினர். இதில், புஷ்பராயன், மை.பா. ஜேசுராஜ் ஆகியோருக்கு மீனவர் வாக்குகள் ஓரளவுக்கு கிடைத்துள்ளன. ஆனால் உதய குமாரை மீனவர்கள் ஒட்டுமொத்தமாக கைவிட்டு விட்டனர்.

தூத்துக்குடியில் அதிகம்

தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை ம. புஷ்பராயன் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவருக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்காவிட்டாலும், கணிசமான மீனவர் வாக்குகள் கிடைத்துள்ளன. தூத்துக்குடி தொகுதியில் சுமார் 80 ஆயிரம் மீனவர் வாக்குகள் உள்ளன. இதில், புஷ்பராயனுக்கு 26,476 வாக்குகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மீனவர் அதிகம் உள்ள தூத்துக்குடி தொகுதியில் 11,006 வாக்குகளும், திருச்செந்தூர் தொகுதியில் 7,759 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழகம் முழுவதும் ஆம்ஆத்மி போட்டியிட்ட 24 தொகுதிகளிலும் புஷ்பராயனுக்குதான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. டெபாசிட்டை இழந்தபோதிலும், இது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து உதயகுமாரிடம் கேட்ட போது, ‘கன்னியாகுமரி தொகுதியில் கணிசமான வாக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். கடற்கரை கிராமங் களில் உதயகுமார் காங்கிரஸ் வேட் பாளருக்கு ஓட்டு போடச் சொல்லி விட்டதாக வதந்தியை பரப்பிவிட்டனர். சில கட்சியினர் பணத்தை கொண்டு வந்து கொட்டினர். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து போராட்டத்தை நடத்தும். ஆம் ஆத்மி கட்சியுடனும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்’ என்றார் அவர்.

கூடங்குளத்தை நம்பவில்லை

ம. புஷ்பராயன் கூறுகையில், ‘கூடங்குளம் போராட்டத்தை மட்டும் நம்பாமல் ஏற்கெனவே உள்ள அடித்தளத்தை அடிப்படையாக கொண்டுதான் தேர் தலில் நிற்க முடிவு செய்தேன். அந்த அடித்தளம்தான் மற்ற இருவரைவிட கூடுதல் வாக்குகளை எனக்கு பெற்று தந்திருக்கிறது’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x