Published : 07 Mar 2015 05:35 PM
Last Updated : 07 Mar 2015 05:35 PM

ராஜபக்சேவிடம் புலிகள் பணம் பெற்றார்கள் என களங்கம் சுமத்துவதா? ரணில் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவிடம் புலிகள் பணம் பெற்றார்கள் என அவர்கள் மீது களங்கம் சுமத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது என்று ரணில் விக்கிரமசிங்கே பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிரான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியப் பிரதமர் இலங்கைக்குப் போகவிருக்கும் நேரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கையில் பயணம் மேற்கொண்டிருக்கும் வேளையில் அவர் இப்படிப் பேசியிருப்பது திட்டமிட்ட ஆத்திரமூட்டும் செயலாகும். இதன் பின்னணியில் இந்தியாவுக்கு எதிரான வேறு சக்திகள் உள்ளனவா என்ற ஐயம் எழுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்துக் கேட்கப்பட்டபோது இந்திய அமைதிப்படையும் கொன்றது, புலிகளும் கொன்றார்கள் என எல்லாவற்றையும் சமப்படுத்திப் பேசியிருக்கிறார். கச்சத்தீவைத் திருப்பித் தரமுடியாது என்று சொன்னதோடு எங்கள் பகுதிக்குள் வந்து மீன்பிடித்தால் சுடத்தான் செய்வோம் என பேசியிருக்கிறார்.

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவிடம் புலிகள் பணம் பெற்றார்கள் என அவர்கள் மீது களங்கம் சுமத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.

பதவிக்கு வருகிற வரைக்கும் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வேடம் போட்ட மைத்ரிபாலவும், ரணிலும் இப்போது இராஜபக்சவைவிடக் கொடுமையான தமது முகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கைக்கு வரும் பிரதமர் மோடி தமிழர் பிரச்சனையை எழுப்பிவிடக்கூடாது என்பதற்காகவே ரணில் இப்படிப் பேசியிருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக இந்தியாவின் ஆதரவைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானத்தை அமெரிக்காவும் நார்வேவும் மதித்து அதுகுறித்துத் தமது தூதர்களை அனுப்பி விசாரித்திருக்கிறது. அதுபோலவே இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையில் பரிவு காட்ட வேண்டும்.

வெளியுறவு அமைச்சரும் இந்தியப் பிரதமரும் அந்தத் தீர்மானம் குறித்து வடக்கு மாகாண முதல்வரிடம் கேட்டறியவேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் அந்த நாட்டின் சிறைகளில் இருக்கும் தமிழ் மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதோடு அவர்களது படகுகளும் ஒப்படைக்கப்படவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கேவின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்திய அரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x