Published : 25 Mar 2015 08:37 AM
Last Updated : 25 Mar 2015 08:37 AM

லீ குவான் யூ மறைவு: தமிழக கிராமங்களில் துக்கம்

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மறைவுக்கு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதி கிராமங்களில் மக்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங் களில் உள்ள மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூருடன் வெறும் தொழில் வழி தொடர்பு மட்டுமின்றி, உறவு வழி தொடர்போடும் உள்ளனர்.

இந்த வட்டாரங்களைச் சேர்ந்த பலர் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உணவகங்கள், பூக்கடைகள், துணிக் கடைகள் போன்றவற்றை நடத்தி வருகின் றனர். பல வணிக நிறுவனங்களில் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊழியர்களாகப் பணியாற்றுகின் றனர். இந்தச் சூழலில், சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம் மன்னார்குடி பகுதி கிராமங்களில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. உள்ளிக்கோட்டை, பரவாக் கோட்டை, ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக் கோட்டை, திருமக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும், மன்னார்குடி நகரிலும் லீ குவான் யூ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நூற்றுக்கணக்கான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

`மண் வீட்டில் வாழ்ந்த எங்களை மாடி வீட்டில் வாழ வைத்த தெய்வமே’ என்பது போன்ற வாசகங் கள் பதாகைகளில் இடம்பெற்றுள் ளன. இதுகுறித்து மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: சிங்கப்பூரில் தமிழர்களுக்கு தனி மரியாதையை பெற்றுத் தந்தவர் லீ. அவரது மறைவு எங்கள் உறவுகளில் ஒருவரை இழந்ததுபோல உள்ளது.

தமிழர்களை பெரிதும் மதித்த, லீ குவான் யூ, தமிழர்களின் உழைப்பு, திறமைகளில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்.தனி மனிதனாக சிங்கப்பூரை உருவாக்கி, தமிழர்களுக்கு சம அந்தஸ்தை அளித்தவர் லீ. அதனால்தான் எங்கள் பகுதி மக்கள் அவரை நினைவுகூர்ந்து, உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றோம்.

வெ.வீரசேனன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர்): அண்ணா, எம்ஜிஆர் உயிரிழந்தபோது காணப் பட்ட அதே துக்க உணர்வு, தற்போது லீ மறைவால் மன்னார்குடி பகுதி மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மாடி வீடும், வறுமை இல்லாத வாழ்க்கையும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாய்த்துள்ளது என்றால், அது சிங்கப்பூர் சென்று உழைத்து சம்பாதித்ததால்தான் என்றார். லீயின் மறைவுக்கு இப்பகுதி மக்கள் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x