Published : 25 Feb 2014 01:34 PM
Last Updated : 25 Feb 2014 01:34 PM

அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழ் பிரதியை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், ஆங்கிலப் பிரதியை விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேட்டியளித்த முதல்வர், தேர்தல் அறிக்கையில் நிறைய பக்கங்களும், அறிவிப்புகளும் இடம்பெற்றிருப்பதாக கூறினார்.

மேலும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கையையும், நிதிக் கொள்கையையும் பொருத்தே அமைவதால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழகத்திற்குரிய பங்கினைப் பெற, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட, அதிமுக அங்கம் வகிக்கும் ஓர் அரசு மத்தியில் அமைவது அவசியம்; அத்தியாவசியம்; காலத்தின் கட்டாயம். அப்போது தான் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

தமிழக மக்களின் துன்பங்களைப் போக்கும் வகையில், துயர்களைத் துடைக்கும் வகையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் வகையில், அதிமுக கீழ்க்கண்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது.

கூட்டுறவு கூட்டாட்சி

இன்றைய சூழ்நிலையில் இறையாண்மையை தமக்குள் பகிர்ந்து கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாமல் தத்தம் எல்லைக்குள், தனக்கான எல்லைக்குள் சுதந்திர செயல்பாட்டோடு பொதுப் பிரச்சினைகளை கூட்டுறவு மனப்பான்மையுடன் அணுகி தீர்வு காண வேண்டும். இதுவே கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் ஆகும். இந்தக் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை

இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது.

தமிழக மீனவர் நலன்

சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்; தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை உறுதி செய்யும் வகையில், சென்னை காசிமேடு, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும்.

புலிக்கட் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலுள்ள நதி முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.

எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடல் அரிப்பு பிரச்சினையை தடுக்கும் வகையில், போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மீனவர்களின் நலன்களைக் பாதுகாக்கும் வகையில் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் சீரமைக்கப்படும்.

கச்சத்தீவு மீட்பு

தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை அகில இந்திய அளவில் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

தமிழ் ஆட்சி மொழி

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தும். இதுவன்றி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம்

அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் இருக்கின்ற மாநிலங்களில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

மண்ணெண்ணெய் ஒதுக்கீடு

தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

மின்சார வழித்தடங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்படுத்துதல்

மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வகையில், புதிய மின் வழித்தடங்களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு டி.ஏ.எஸ். அனுமதி

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தேவையான டி.ஏ.எஸ். அனுமதியை பெற அதிமுக நடவடிக்கை எடுக்கும். இதே போன்று, அனைத்திந்திய அளவில் மாநில அரசுகள் கேபிள் டி.வி. சேவை வழங்குவது ஊக்குவிக்கப்படும்.

காவேரி மேலாண்மை வாரியம்

காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைககளை அதிமுக எடுக்கும்.

தேசிய அளவிலான வாக்குறுதிகள்

மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும், மேம்படுத்தவும் அதிமுக பாடுபடும்.

சமூக நீதி

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அதிமுக பாடுபடும். இதே போன்று, அந்தந்த மாநிலங்கள், மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் நலன்

பெண் சிசுக் கொலையை அறவே ஒழிக்க முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் தொட்டில் குழந்தைத் திட்டம். ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் அவர் வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை இருந்தால் 50,000 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவரின் பெயரிலும் தலா 25,000 ரூபாயும் வைப்பீடு செய்யும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் அதிரடிப்படை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், குழந்தையின் பெயருக்கு முன்பு தாய் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக சேர்த்தல் என்ற புரட்சிகரமான உத்தரவு, இந்தியாவிற்கே வழிகாட்டியாக பாலியல் பலாத்காரத்தை தடுக்க 13 அம்சத் திட்டம் என பெண்கள் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்த அதிமுக பாடுபடும்.

மகளிர் இடஒதுக்கீடு

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்கம்

நதிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கும், நதிகளை இணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

பொதுத் துறை நிறுவனப் பங்குகள்

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படாமல் இருப்பதை அதிமுக உறுதி செய்யும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் முற்றிலும் நிறுத்தப்பட அதிமுக பாடுபடும்.

வெளியுறவுக் கொள்கை

இந்திய நாட்டின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அண்டை நாடுகளுடனான நீண்ட நாள் எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க அதிமுக பாடுபடும். வெளியுறவுக் கொள்கை என்பது மாநில நலன்களுக்கு எதிராக அமையக் கூடாது. எனவே, மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும்.

பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அதிமுக எடுக்கும். அதே போல், பல நாடுகளுடன் அந்தந்த நாட்டு செலாவணி மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பினை நிர்ணயம் செய்வது, அதாவது கரன்சி ஸ்வாப் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வேறுபாடு காரணமாக ஏற்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை களையும் வகையில், இதற்கென தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பது உறுதி செய்யப்படும். மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை எரிவாயு விலை என்பது உலகச் சந்தையின் அடிப்படையிலும், அமெரிக்க டாலர் கணக்கீட்டின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இயற்கை வாயுவினை எடுக்கும் நிறுவனங்களுக்கான விலையை 1.4.2014 முதல் மத்திய அரசு இரட்டிப்பு ஆக்கியுள்ளது. இந்த விலை உயர்வு மறு ஆய்வு செய்யப்படும்.

கருப்புப் பணத்தை மீட்டெடுத்தல்

அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி உருவாக்கப்படின், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

பிற நாடுகளுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு

வரி தவிர்ப்பு என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இந்திய நாட்டின் வருவாயைப் பெருக்கவும் வழிவகை செய்யப்படும்.

தொலைநோக்குத் திட்டம் 2023

வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023–ஐ தயாரித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது போன்றதொரு திட்டத்தை இந்தியா முழுமைக்கும் தீட்டி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

சிறுபான்மையினர் நலன்

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற அரசு அதிமுக அரசு.

உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத் தொகையையும் அரசு உயர்த்தி இருக்கிறது. வக்ஃபு வாரிய நிர்வாக மானியத் தொகை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வக்ஃப் நிறுவனங்கள் மேம்பாட்டு நிதிக்கு 2012-2013 ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.

சிறுபான்மையினர் சுயதொழில் புரியும் வகையில், தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும். நீண்ட நாள் கோரிக்கையான மதம் மாறிய ஆதி திராவிடர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோர் நலன்

மத்திய அரசால் வழங்கப்படும் முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

மாற்றுத் திறனாளிகள் நலன்

தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு படி 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு படியினை இந்தியா முழுவதும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமல்லாமல், அரசு வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இடங்களை நிரப்ப ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

வருமான வரிச் சட்டம் பிரிவு 80 டிடி-ன்கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு அளிக்கப்படும் சலுகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவும், பொதுக் கட்டடங்களில் உள்ள அலுவலகங்களை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகுவதை உறுதி செய்யும் வகையிலும், சாய்தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அரசின் வருவாயைப் பறிக்க வழிவகை செய்யும் வருமான வரிச் சட்டத்தை திருத்தி அமைத்தல்

மாநில அரசுகளால் பொதுத் துறை நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அனுமதி கட்டணம், உரிமைப் பங்கு, உரிமைக் கட்டணம் ஆகியவற்றிற்கான தொகையை மாநில பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம் என்ற நிலை 2012-2013 ஆம் ஆண்டு வரை இருந்தது. இதனை மாற்றி, மாநில அரசால் விதிக்கப்படும் கட்டணங்களை தங்களது வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளக் கூடாது என்று வருமான வரிச் சட்டம் 40-ல் திருத்தம் செய்யும் வகையில், நிதிச் சட்டத்தினை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம், வரி அல்லாத வகையில் மாநில அரசுகளுக்கு நியாயமாக கிடைக்கும் வருவாயினை மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளதோடு, மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளது. அதே சமயத்தில், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் இந்தச் சலுகையை அனுபவிக்கின்றன. இந்தச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

நிலக்கரி சுரண்டல்

குறைந்த விலையில் மாநில துறைகளுக்கு நிலக்கரி கிடைக்கும் வகையிலும், மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும், தற்போதுள்ள நிலக்கரி எடுப்பு முறை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

இயற்கை வளங்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை

நாட்டின் இயற்கை வளங்கள் நியாயமான விலையில் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில், வெளிப்படையான இயற்கை வளக் கொள்கையை அதிமுக உருவாக்கும்.

தனி நபர் வருமான வரி

சாதாரண மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை

உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையிலும், உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச அளவில் போட்டியிடக் கூடிய வகையிலும், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதே அதிமுக கொள்கை ஆகும். இது போன்ற கொள்கையினால் மட்டுமே ஏறி வரும் பண வீக்கத்தையும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியையும் கட்டுப்படுத்த முடியும் என அதிமுக கருதுகிறது. இவற்றை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களைப் பெருக்க நடவடிக்கை

பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய வெளிப்படையற்ற முறையிலான மானியங்களை தன் விருப்பத்திற்கேற்ப மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதனை மாற்றி, மானியங்களை வெளிப்படையான முறையில் மாநிலங்களுக்கு வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 275-ன்படி மத்திய அரசின் விருப்புரிமையில் அளிக்கப்படும் மொத்த மானியங்களின் அளவை 7 விழுக்காடாக குறைக்கவும், நிதிக் குழுவின் மூலமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்கவும் அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

மானியம் உட்பட செலவினப் பொறுப்பை மாநில அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்கும் போது, அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தையும் அளிக்க தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு

மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரையினை பின்பற்றாமல், 14 ஆவது நிதிக் குழு தனது கடமையினை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி

மத்திய அரசின் வருவாயில் பிரிக்கக் கூடிய இனங்களிலிருந்து 5 விழுக்காடு தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

விரிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை

அதிக வளர்ச்சி, குறைந்த நுகர்வோர் பணவீக்கம், குறைந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவற்றை எய்துவதற்கான விரிவான பொருளாதாரக் கொள்கை வகுக்கப்படும்.

வேளாண்மை

பயிர்க் கடன்களை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவர் பாதுகாப்புத் திட்டம்

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை, அகில இந்திய அளவில் அதிமுக செயல்படுத்திடும்.

உற்பத்தித் துறை

உற்பத்தி துறையை பெருக்கும் வகையில் தொழிற் கொள்கைகளை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வெளியிட்டுள்ளார். அகில இந்திய அளவில் இதே போல் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

உற்பத்தி மண்டலம் ஒன்றினை ஏற்படுத்தவும், உள்நாட்டு சேமிப்பினை ஊக்கப்படுத்தவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக, உற்பத்தி துறையில் முதலீடுகள் பெறுக வழிவகை செய்யப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 விழுக்காடு உற்பத்தி துறை மூலம் பெறப்படுவது உறுதி செய்யப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்த மாநில அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அகில இந்திய அளவில் கொண்டுவரப்படும்.

ஜவுளித் தொழில்

ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

வேலைவாய்ப்பினை அதிகரித்தல்

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் இணக்கமான தொழில் கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்.

ஊழல் ஒழிப்பு

ஊழலற்ற அரசு மத்தியில் அமைய அதிமுக உத்தரவாதம் அளிக்கிறது.

செயல்படும் மத்திய அரசு

கடந்த பத்து ஆண்டுகளாக ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலையிலேயே மத்திய அரசு இருந்தது. கொள்கை முடக்குவாதத்தால் அது பரிதவித்தது. எடுக்கப்பட்ட சில துறை சார்ந்த கொள்கை முடிவுகளில், பெரும்பாலானவை தவறானதாகவும், காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தன.

அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் திடமான கொள்கை முடிவுகளை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய திடமான முடிவுகளை எடுத்திட உறுதியான, துணிச்சலான, வலிமையான தலைமை தேவை. அத்தகைய தலைமையை அதிமுக வழங்கும்.

இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x