Published : 20 Mar 2015 09:29 AM
Last Updated : 20 Mar 2015 09:29 AM

தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள்: இலங்கையை விசாரிக்க கோரி கையெழுத்து பிரச்சாரம் - அமெரிக்காவில் தொடங்கப்பட்டது

தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் புரிந்த இலங்கையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா. சபையை வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் செய்த போர் குற்றங்கள், இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த ஐ.நா. சபையை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவில் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

15 மொழிகளில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற வகைசெய்யும் இந்த மாபெரும் பிரச்சாரத்தை அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ராம்சே கிளார்க், நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபை தலைமை அலுவலகத்துக்கு வெளியே தொடங்கிவைத்தார். “தமிழர்களின் துயரம் முடிவுக்கு வர வேண்டும், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு தனது கையெழுத்தை பதிவுசெய்து அவர் முறைப் படி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, தமிழ்த் தேசிய கீதத்துடன் இந்த பிரச்சார நிகழ்ச்சி தொடங்கியது. அதைத்தொடர்ந்து, நிவேதா ஜெயகுமார், சவுமியா கருணாகரன் ஆகியோர் பிரச்சார மனுவை தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசித்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய நாடு கடந்த தமிழ் ஈழம் அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன், “இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், இனவெறி ஆகியவற்றில் இருந்து தனது குடிமக்களை பாதுகாப்பதில் ஒரு நாடு வெளிப்படையாக தோல்வியடையும்போது அந்த மக்களை பாதுகாப்பதற்காக அதில் தலையிடுவது சர்வதேச சமுதாயத்தின் கடமை. இந்த கையெழுத்துப் பிரச்சாரம் ஐ.நா. சபைக்கு எதிரானது அல்ல. இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

15 மொழிகளில்

கையெழுத்துப் பிரச்சார மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, மலாய் உள்பட 15 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையெழுத்து பெறுவதற்காக பிரத்யேக இணையதளமும் (www.tgte-icc.org) உருவாக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x