Published : 06 Mar 2015 02:28 PM
Last Updated : 06 Mar 2015 02:28 PM

திருமணத்துக்கு மறுத்த மகள் அடித்துக் கொலை: தந்தை சரண்

சிவகங்கை அருகே உடைகுளத்தில், திருமண ஏற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை அடித்துக் கொலை செய்த தந்தை சிவகங்கை தாலுகா போலீஸில் சரண் அடைந்தார்.

உடைகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் தமிழ்ச்செல்வி (19). பிளஸ் டூ முடித்துவிட்டு விவசாயம், வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். அப்போது, இதே ஊரைச் சேர்ந்த அழகு மகன் பூமிநாதன் (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பூமிநாதன், தூத்துக்குடியில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இருவரும் ஊரை விட்டு வெளியூர் சென்றுள்ளனர்.

இது குறித்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர், சிவகங்கை தாலுகா போலீஸில் ஜன.26-ம் தேதி மகளைக் காணவில்லை எனப் புகார் தெரிவித்தனர்.

தாலுகா போலீஸார் தமிழ்ச்செல்வியை மீட்டு பிப்.1-ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தமிழ்ச்செல்வி பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழ்ச்செல்விக்கு திருமணம் செய்து வைக்க தங்கராஜ் ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்ச்செல்வி, பூமிநாதனோடு தொலைபேசியில் மீண்டும் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு தப்பிக்க தமிழ்ச்செல்வி முயற்சித்தாராம். அவரை தங்கராஜ், விறகு கட்டையால் தலையில் அடித்ததில் தமிழ்ச்செல்வி இறந்ததார். பின்பு காட்டுப் பகுதியில் சடலத்தை எரித்துள்ளார்.

சிவகங்கை தாலுகா இன்ஸ் பெக்டர் பொன்ரகுவிடம், தங்கராஜ் நேற்று சரண் அடைந்தார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ், சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். அவர் கூறுகையில், திருமண ஏற்பாட்டுக்கு தமிழ்ச்செல்வி எதிர்ப்பு தெரிவித்ததால் அடித்துக் கொலை செய்து எரித்ததாகவும் கிராம நிர்வாக அலுவலரிடம் தங்கராஜ் வாக்குமூலம் அளித்து சரண் அடைந்துள்ளார். அவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x