Published : 21 Feb 2015 09:44 AM
Last Updated : 21 Feb 2015 09:44 AM

தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும்: தமிழறிஞர் தமிழண்ணல் வலியுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழறிஞர் தமிழண்ணல் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இப்போராட்டத்தை தமிழறிஞர் தமிழண்ணல் தொடங்கி வைத்து பேசியதாவது:

தாய் மொழிக்காக நடைபெறும் எந்தப் போராட்டமும் தோற்றது கிடையாது. இது மக்கள் போராட்டமாக, சமுதாயப் போராட்டமாக மாற வேண்டும். இதன் முக்கியத்துவத்தை தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும். உயர் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை அனைவரும் அறிய வேண்டும். இதற்கு தாய் மொழியில் விசாரணை நடைபெற வேண்டும். நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் வழக்காளர்களுக்கு தெரியாமல் இருந்தால், பிழைப்பு ஓடும் என்பதற்காக பலர் இதை வலியுறுத்தாமல் உள்ளனர்.

இதன் காரணமாகவே தமிழகத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கப் போராட்டம் நடத்த வேண்டிய இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழர்களின் சுயநலப் போக்கு மாற, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக மாற வேண்டும். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மத்திய அரசின் அடிமையாக உள்ளனர். மத்திய அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொரு காரியத்தையும் சாதிக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

நமது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. தமிழக அரசை மத்திய அரசு மதிப்பது இல்லை. நாம் இந்தி, ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. தாய் தமிழை பயன்படுத்த, தமிழ் ஆட்சி செய்வதற்கான உரிமையை கேட்கிறோம். இதில் தவறு இல்லை. இந்தி பேசும் இந்தியா என்றாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மூன்றாயிரம் ஆண்டு தொன்மையான தமிழ் மொழி பெருமை மிக்கது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தமிழை அழிக்க நினைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் தாய் மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகின்றன. இது வேதனை அளிக்கிறது. நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x