Published : 06 Feb 2015 11:46 AM
Last Updated : 06 Feb 2015 11:46 AM

ரூ.3 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட்டில் கழிவறைகளை புதுப்பிக்க திட்டம்

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கழிவறைகளை ரூ.3 கோடி செலவில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் பூ, பழம், காய்கறி மார்க்கெட் என 3 பிரிவுகளாக இயங்கி வருகிறது. சிஎம்டிஏ-வின் கீழ் இயங்கி வரும் மார்க்கெட் நிர்வாகக் குழு இதை நிர்வகித்து வருகிறது. இந்த மார்க்கெட்டில் மொத்தம் 3 ஆயிரத்து 157 கடைகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் வேலை பார்த்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வசதிக்காக காய்கறி மார்க்கெட் பகுதியில் 36 கழிவறைகளும், பழ மார்க்கெட் பகுதியில் 19 கழிவறைகளும், பூ மார்க்கெட் பகுதியில் 12 கழிவறைகளும் உள்ளன. இவை போதிய பராமரிப்பின்றி கிடப்பதால் தொழிலாளர்களும், வாடிக்கையாளர்களும் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் மார்க்கெட் நிர்வாகக் குழு சிஎம்டிஏவுக்கு கருத்துரு அனுப்பியிருந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மார்க்கெட் நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டு, குழுத் தலைவராக, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஏ.கார்த்திக் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மார்க்கெட்டில் பயன்பாடின்றி கிடக்கும் 67 கழிவறைகளை புதுப்பிக்க சிஎம்டிஏ அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மார்க்கெட் நிர்வாகக் குழு அதிகாரி ஒருவர் கூறும்போது, “மார்க்கெட்டில் உள்ள 67 கழிவறைகளை ரூ.3 கோடியில் புதுப்பிக்க உள்ளோம். இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறும் போது, “கழிவறைகளை புதுப்பித்தால் மட்டும் போதாது. அதை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். மார்க்கெட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x