Published : 23 Feb 2015 01:22 PM
Last Updated : 23 Feb 2015 01:22 PM

பன்றிக் காய்ச்சலை தடுக்க இலவச தடுப்பூசி முகாம்: தமிழிசை கோரிக்கை

பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி முகாம், இலவச நடமாடும் பரிசோதனைக் கூடங்கள் தேவை என்று அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில், குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமாரி, விருதுநகர், ராஜபாளையம், மதுரையில் வேகமாக பரவி வரும் பனறிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர போர்க்கால தடுப்பு நடவடிக்கைகள் போல் இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் வெறும் 7 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவச பரிசோதனை செய்ய முடியும் என்ற செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மேலும் அரசு நிர்ணயித்த தனியார் பரிசோதனைக்கூடம் கட்டணம் ரூ.3500-ஐ எத்தனை ஏழைகளுக்கு கொடுக்க முடியும்.

அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும், மாவட்ட தாலுகா மருத்துவமனைகளிலும் ரத்தப்பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அளவில் ரத்த பரிசோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்த முடியும். நடமாடும் பரிசோதனைக் கூடங்களை 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் கொண்டு செல்ல வேண்டும். அதுவரை தனியார் பரிசோதனைக் கூடங்கள் மக்களிடம் அதிக கட்டணம் வாங்கி கட்டணக் கொள்ளை சுரண்டலை கண்காணிக்க வேண்டும். தனியார் பரிசோதனைக் கூட கட்டணத்தை முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு மூலமாக வழங்க வேண்டும்.

டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் சிகிச்சைகள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி. உடனடியாக அரசு தலையிட்டு பன்றிக் காய்ச்சல,, டெங்கு போன்ற கொள்ளை நோய்களை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேணடும்.

அதுவரை, தனியார் மருத்துவமனைகள் அரசின் பல்வேறு சலுகை பெறுவதனை மனதில் கொண்டு, கட்டணமில்லா பரிசோதனை செய்வது அவர்களது சமூகக் கடமை என்பதை நினைவூட்டி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். நோய்த்தாக்கம் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் உடனடியாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x