Published : 10 Feb 2015 03:02 PM
Last Updated : 10 Feb 2015 03:02 PM

நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாவிபாளையம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கப்படுமா?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு, மனுக்களை அளித்தனர்.

இடநெருக்கடியில் அரசுப் பள்ளி

திருப்பூர் மாநகராட்சி, 18-வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 2011-12 கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், இப்பள்ளி தற்போது வரை வாவிபாளையம் தொடக்கப் பள்ளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த கட்டிடத்திலேயே இயங்குகிறது.

மாணவர்களுக்கு போதுமான இட வசதி இல்லை. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு, இடம் இல்லாததால் பள்ளிக்கு கட்டிடம் கட்ட முடியவில்லை. இதுதொடர்பாக பலமுறை கடிதம் எழுதியும், உயர்நிலைப் பள்ளிக்கான நில ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே, நெருப்பெரிச்சல் கிராமத்திலுள்ள புறம்போக்கு நிலமாக உள்ள அரசு இடத்தை, வாவிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்

பல்லடம் வட்டம், எலவந்தி கிராமத்துக்கு உட்பட்டு 8 சிறிய கிராமங்கள் உள்ளன. விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் கொண்ட இந்த கிராமத்துக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படவில்லை. எலவந்தி கிராம நிர்வாகப் பணியை, கேத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

சாதிச் சான்றிதழ், பட்டா மாறுதல், அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்த வகையான பணிகளுக்கும் பல கிலோ மீட்டர் சென்று, கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டியுள்ளது. கேத்தனூர் செல்ல போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே, எலவந்தி கிராமத்துக்கென, கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்றனர்.

சாலை, சாக்கடை வசதிகள் வேண்டும்

திருப்பூர் மாநகராட்சி, 58-வது வார்டுக்கு உட்பட்ட காமாட்சி நகர் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள 3-வது வீதியில், தினமும் குளம்போல் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், கொசு மற்றும் நோய் தொற்று கிருமிகளும் உற்பத்தியாகிறது. முதியோர், பள்ளி மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் செல்ல வேண்டியுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் சாலை, சாக்கடை வசதிகள் செய்து தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

அகதிகள் முகாம் மூதாட்டி மனு

பல்லடம் வட்டம், பருவாய் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் வாழும் ராசம்மா (63) அளித்த மனுவில், 1990-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து பருவாய் முகாமுக்கு வந்தோம்.

கணவர் நேசராஜா (68). இருவருக்கும் வயதாகிவிட்டதால் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் திருவாதூர் முகாமில் வாழும், தனது மகளுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x