Published : 26 Feb 2015 09:18 AM
Last Updated : 26 Feb 2015 09:18 AM

புதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டம் - திருவைகுண்டத்தில் 144 தடை உத்தரவு: பதற்றம் நீடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நான்காவது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.

திருவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (28). புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் களால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இவரது சடலம் பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

உண்மையான குற்றவாளி களை கைது செய்யக் கோரி பாஸ்கரின் சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

தொடர் மறியல் போராட்டம்

இச்சம்பவத்தை தொடர்ந்து திருவைகுண்டம் - வல்லநாடு இடையே கடந்த நான்கு நாட் களாக பஸ் போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது. இதனால் கொங்க ராயகுறிச்சி, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, மணக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இக்கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி, மருத்துவமனைக்குக்கூட வெளியூர் செல்ல முடியவில்லை. உடனே பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் எனக் கோரி, நேற்று காலை தோழப்பன்பண்ணையில் இருந்து சுமார் 200 பேர் மறியல் செய்வதற்காக திருவைகுண்டம் நோக்கி கிளம்பினர்.

தகவல் அறிந்து டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

சுமார் 1 மணி நேரம் கழித்து பத்மநாபமங்கலத்தில் சுமார் 150 பேர் சாலை மறியலுக்காக கிளம்பினர். ஏ.டி.எஸ்.பி கந்தசாமி, டி.எஸ்.பி விஜயகுமார் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும், காலை 11.30 மணியளவில் கெட்டியம்மாள்புரம், வெள்ளூர், கால்வாய், திருவைகுண்டம் பகுதியை சேர்ந்த மக்கள் திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே திரண்டு மறியலுக்கு தயாரானார்கள். தொடர்ந்து அசாதாரண நிலை நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் கலைந்து சென்றனர்.

தடை உத்தரவு

தொடர் மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் காரண மாக திருவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து திருவைகுண்டம் வட்டத்தில் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி அபய்குமார் சிங், நெல்லை சரக டி.ஐ.ஜி சுமித் சரண், எஸ்.பி.க்கள் மா. துரை (தூத்துக்குடி), மணிவண் ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்.

கிருஷ்ணசாமிக்கு மறுப்பு

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருவைகுண்டம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை அங்கேயே தடுத்த போலீஸார் திருவைகுண்டம் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவர் திருநெல்வேலி சென்றார். இதனிடையே இக்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு

திருவைகுண்டம் பிச்சனார்தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி சுமித்சரண் நேற்று மாலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அருகே நிறுத்தியிருந்த போலீஸ் வாகனம் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசினார். ஆனால், அந்த குண்டு போலீஸ் வாகனம் மீது படாமல் அருகே விழுந்து வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஒரு நபரை போலீஸார் உடனடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவைகுண்டம் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x