Published : 09 Feb 2015 09:24 am

Updated : 09 Feb 2015 09:24 am

 

Published : 09 Feb 2015 09:24 AM
Last Updated : 09 Feb 2015 09:24 AM

இன்று அன்று | 1986 பிப்ரவரி 9: வந்து சென்றது ஹாலி வால் நட்சத்திரம்

1986-9

1986-ல் இதே நாளில் உலகமே பரபரப்பாக இருந்தது. ஏதோ ஒரு தேவதை வந்திறங்கப்போவதுபோல், உலகமே வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. ஹாலி வால் நட்சத்திரம் என்ற பெயரும் அது தொடர்பான செய்திகளும், பல விதமான புனைகதைகளும் புதிரான அந்த வால் நட்சத்திரம் பற்றிய பெரும் கற்பனைச் சித்திரத்தை மக்கள் மனதில் வரைந்தன. அன்று வானில் தெரிந்த அந்த நட்சத்திரத்தைப் பலரும் தங்கள் வீட்டு மாடியில் நின்று வியந்து ரசித்தார்கள். பல நாட்களுக்குப் பேசுபொருளாக இருந்தது அந்த வால் நட்சத்திரம்.

அதுபோன்ற அனுபவம் மீண்டும் கிடைக்காதா என்று ஆசைப்படுபவர்கள், 2061 வரை காத்திருக்க வேண்டும் என்கிறது வானியல். ஆம், ஹாலி வால் நட்சத்திரம் ஒவ்வொரு 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமிக்கு அருகில் வந்துசெல்கிறது. பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்கக் கூடியனவற்றில் குறைந்த கால இடைவெளியில் பூமிக்கு அருகில் வந்துசெல்லும் ஒரே வால் நட்சத்திரம் ஹாலி வால் நட்சத்திரம்தான். இந்த வால் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள், கி.மு. காலத்திலிருந்தே கிடைக்கின்றன. சீனர்கள், பாபிலோனியர்கள் என்று பலரும் இதைப் பற்றி பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் எட்மண்ட் ஹாலி. அதனால்தான், அதன் பெயர், ‘ஹாலியின் வால் நட்சத்திரம்’!


இங்கிலாந்தைச் சேர்ந்த வானியல் அறிஞரான ஹாலி, கப்பல் கேப்டன், நிலவரைபட நிபுணர், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர். உலகையே புரட்டிப்போட்ட நியூட்டனின் ‘பிரின்ஸிபியா’ புத்தகத்தை எழுதத் தூண்டியதும், அந்தப் புத்தகத்தை வெளியிட்டதும் ஹாலிதான்!

1682-ல் அந்த வால் நட்சத்திரத்தைப் பார்த்தார், ஹாலி. அதற்கு முன்னர் 1456, 1531 மற்றும் 1607-ம் ஆண்டுகளில் மற்ற வானியலாளர்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள். ஹாலி இறந்து 16 ஆண்டு களுக்குப் பின்னர்தான், வால் நட்சத்திரத்துடன் ஹாலியின் பெயரும் ஒட்டிக்கொண்டது.

1986-க்கு முன்னர், 1910-ல் இந்த நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது. உலகம் முழுவதையும் தன் எழுத்துகளால் அளந்த பாரதி, ஹாலி வால் நட்சத்திரத்தை விடுவாரா என்ன? ‘சாதாரண வருஷத்துத் தூமகேது’ என்ற தலைப்பில் அதைப் பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார். 1986-ம் ஆண்டில் யாராவது ‘குரோதன வருஷத்துத் தூமகேது’ என்ற பெயரில் கவிதை எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பார்க்க வேண்டும்.

பாரதியின் பாடல் இங்கே:

சாதாரண வருஷத்துத் தூமகேது

தினையின் மீது பனை நின்றாங்கு

மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்

கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகும்

தூம கேதுச் சுடரே, வாராய்.

எண்ணில்பல் கோடி யோசனை யெல்லை

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்

புனைந்தநின்னொடுவால் போவதென் கின்றார்.

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி

ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ

போதி யென்கின்றார்; புதுமைகள் ஆயிரம்

நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்

நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;

உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே

தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கில்லை

வாராய், சுடரே! வார்த்தைசில கேட்பேன்:

தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்

தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்தி நீ

போவையென்கின்றார்; பொய்யோ, மெய்யோ

ஆதித் தலைவி யாணையின்படி நீ

சலித்திடுந் தன்மையால், தண்டம் நீ செய்வது

புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென

விளம்புகின்றனர்; அது மெய்யோ, பொய்யோ?

ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒருமுறை

மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்,

இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்

விளையுமென் கின்றார்; மெய்யோ, பொய்யோ?

சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்

மீட்டும்எம் மிடைநின் வரவினால் விளைவதாப்

புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?


ஹாலி வால் நட்சத்திரம்1986 பிப்ரவரி 9வால் நட்சத்திரம்

You May Like

More From This Category

More From this Author