Published : 26 Feb 2015 03:46 PM
Last Updated : 26 Feb 2015 03:46 PM

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் தொழிலதிபர்களுக்கே பலன்: விஜயகாந்த்

"மத்துய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட மசோதா விவசாயிகளைப் பாதிக்கும். இதில் பாதகமான அம்சங்களை பிரதமர் மோடி விலக்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கொண்டுவந்தது. தற்போது அந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல்பெற பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக தொழில் வளாகங்கள் திட்டம், தனியார் - பொதுத்துறை இணைந்த திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டம், வீட்டு வசதி திட்டம், ராணுவ திட்டம் மற்றும் பல திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்த, அந்த நிலத்தின் உரிமையாளர்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும், வளம் கொழிக்கும் விவசாய நிலங்களாக இருந்தாலும் வரம்பே இல்லாமல் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தலாம் எனவும், நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து நிலஉரிமையாளர்கள் அரசின் அனுமதி இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடுக்க முடியாது என்பது போன்ற அம்சங்கள் நிறைந்த இச்சட்டத்தை விவசாயிகளும், நிலஉரிமையாளர்களும் சர்வாதிகாரச்சட்டம் என்றே கருதுகின்றனர்.

மத்திய அரசு இச்சட்டத்தில் உள்ள பாதிக்கக்கூடிய அம்சங்களை விலக்கிவிட்டு, விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களின் சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கிய பிறகு இந்த அவசரச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பிரதமர் நரேந்திரமோடியைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஏற்கனவே இருந்த சட்டத்தில், கையகப்படுத்தப்படும் நிலத்தில் எழுபது சதவிகித நில உரிமையாளர்களின் ஒப்புதலை கட்டாயமாக பெறவேண்டும் என்ற அம்சம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலம், திட்டம் அறிவிக்கப்பட்டோ அல்லது நிலம் கையகப்படுத்தப்பட்டோ ஐந்து ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் நிலத்தை வாங்கியவர்களிடமே திரும்ப அளிக்க வேண்டும் என்ற அம்சமும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது.

அதனால் கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அரசிடமோ அல்லது தனியார் நிறுவனங்களிடமோதான் இருக்கும். நில உரிமையாளர்கள் அதை திரும்பப்பெற முடியாது. அதோடு பழைய சட்டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், எந்த காரணமுமின்றி கையகப்படுத்தி இருந்தாலும் அந்த நிலங்கள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள, புதிய சட்டப்படி செல்லுபடி ஆகும்.

தனியார் நிறுவனங்கள் என்றால் இச்சட்டத்தின் படி அரசு சாராத அனைத்து நிறுவனங்களும் அதில் வந்து விடுகின்றன. நிலம் கையகப்படுத்துதலில் அரசு அதிகாரி மீது அரசின் அனுமதியின்றி நடவடிக்கை எடுக்க முடியாது. இதுபோன்று இன்னும் பல பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் இப்புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இது விவசாயிகளை மிகவும் பாதிக்கக்கூடிய சட்டமாகும். இச்சட்டத்தால் பெரும் தொழிலதிபர்களும், நிறுவனங்களும் தான் பலன் பெறுவார்கள்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

இச்சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, பாதிக்கப்படுவோம் என்று அஞ்சுகின்றவர்களின் அச்சத்தினை போக்கிடும் வகையில், மத்திய அரசு செயல்பட வேண்டும். இந்தியா முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்துள்ள நாடு, விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது.

பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலைத்தான் செய்து வருகின்றனர். விவசாயம்தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கக்கூடிய நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் நிறைவேற்றுவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x